கருணாகரனின் ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புக்கள் நுாலுக்கு எழுதிய முன்னுரை
எது உண்மை? பலம் தான் உண்மை என்று நீட்ஷே சொன்னார். ஈழப்போரிலக்கியப் பரப்பில் வெற்றி பெற்றவர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் எந்த ஒரு படைப்பாளியும் வெற்றி பெற்ற தரப்பிற்கு எதிரான உண்மைகளை வெளிப்படையாக பேச முடியாத ஓர் இலக்கியச் சூழல் நிலவி வந்திருக்கின்றது. நிலவுகிறது. தோற்கடிக்கப்பட்ட தரப்பிற்;கு அல்லது அந்த நிலத்தில் அதிகாரத்தில் இல்லாத தரப்புக்குச் சாதகமான உண்மைகளை எழுத நினைக்கும் படைப்பாளி ஒரு வரையறைக்கும் அப்பால் போக முடிந்ததில்லை. குறிப்பாக அந்த எழுத்து ‘அக்ரிவிஸம்| எனப்படும் வளர்ச்சிக்கு போக முடியாத அதாவது, செயலுருப்பெற முடியாத சூழலே காணப்படுகின்றது. நந்திக் கடல் வீழ்ச்சிக்குப் பின்னரும் நிலமை அவ்வாறுதான் உள்ளது. தோற்கடிக்கப்பட்ட தரப்பின் நியாயங்களை அல்லது அதற்கு சாதகமான உண்மைகளை எழுத வெளிப்படையாக அஞ்சும் ஒரு நிலை.
எனவே, ஈழப்போரிலக்கியப் பரப்பில் உண்மையை ஏதோவொரு விகிதமளவுக்கு விழுங்கிக் கொண்டு எழுதும் ஒரு பாரம்பரியமே தொடர்ந்து பேணப்பட்டு வந்துள்ளது. வருகின்றது. ஒன்றின் அச்சம் காரணமாகவோ அல்லது சட்ட ரீதியான தணிக்கை காரணமாகவோ அல்லது சுயதணிக்கையின் பாற்பட்டோ அல்லது இறுதி இலட்சியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற விசுவாசத்தின் பேராலோ அல்லது தான் சார்ந்த தரப்பை பலவீனப்படுத்தக்கூடாது என்ற சரியான அல்லது பிழையான பொறுப்புணர்ச்சியின் காரணமாகவோ அல்லது ஏதாவொரு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டோ உண்மையானது ஏதோவொரு விகிதமளவுக்கு விழுங்கப்பட்டே வந்துள்ளது அல்லது வேறு ஒரு காலத்திற்கு கூறப்படுவதற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது அல்லது உறங்கு நிலையில் வைக்கப்பட்டுள்ளது அல்லது அடைகாக்கப்படுகிறது.
இத்தகைய ஒரு சுமார் மூன்று தசாப்த கால கலை இலக்கிய பாரம்பரியத்தில் எழுத்தாளர்களாக அல்லது எழுத்து ஊழியம் செய்பவர்களாக அல்லது கதை சொல்லிகளாக அல்லது கவிஞர்களாக, விமர்சகர்களாக, ஆய்வாளர்களாக, பாடகர்களாக, ஊடகவியலாளர்களாக இருந்த எல்லோருமே மறைக்கப்பட்ட அல்லது விழுங்கப்பட்ட அல்லது ஒத்திவைக்கப்பட்ட உண்மைகளுக்கு பொறுப்பாளிகள் தான். ஒரு காலகட்டத்தில் இரத்தமும், இரத்தப் பழியும் எங்கள் எல்லோருடைய கைகளிலும் எழுத்துக்களிலும் ஓட்டிக்கொண்டிருக்கிறன.
வங்கக் கடலில் கழுவியும் அது போகாது. நந்திக் கடலில் கழுவியும் அது போகாது. எந்தக் கடலில் கழுவியும் அது போகாது. ஏனெனில் நந்திக் கடல் வீழ்ச்சிக்குப் பின்னரும் அந்தப் பாரம்பரியம் தொடர்வதற்கு நாங்களும் பொறுப்பாயிருக்கின்றோம்.
நாங்கள் இப்பொழுதும் உண்மைகளை விழுங்கிக் கொண்டிருக்கிறோம். ஒரு புறம் அச்சம் காரணமாக இன்னொரு புறம் எதிர்காலத்தைக் குறித்த ஒளிமிகுந்த நம்பிக்கை ஒன்றிற்காக அல்லது ஏதோவொரு விசுவாசத்தின் நிமித்தமாக. எதற்காகவாயினும் நாங்கள் உண்மைகளை விழுங்கிக் கொண்டிருக்கின்றோம் அல்லது ஒத்திவைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதனாலேயே எங்களின் மொழி நேரடித் தன்மை குறைந்ததாகவும், பூடகமானதாகவும், மூட்டமானதாகவும் அமைந்து விடுகிறது. கடந்த சில தசாப்த காலங்களாக நாங்கள் எல்லாவற்றையும் ஸ்தூலமான வார்த்தைகளால் கூற முடியவில்லை. இத்தகைய ஓர் சூழலில் ஒன்றில் மௌனமாக இருக்க வேண்டியிருக்கிறது அல்லது அரூபமான வார்த்தைகளின் பின் ஒளிந்து கொள்ள வேண்டியிருக்கிறது அல்லது வரிகளிற்கிடையில் பொடி வைத்து எழுத வேண்டியிருக்கிறது.
செயலுக்குப் போகாதவரின் எழுத்து எப்படியுமிருக்கலாம். தனது எழுத்துக்களை விடவும் தனது வாழ்க்கையே ஒரு மேலான பிரதி எனக் கருதும் ஒருவர் எல்லாவற்றையும் எல்லாக் காலங்களிலும் எழுதிவிட முடியாது. அதாவது தனது சொற்களுக்கு தனது வாழ்க்கை மூலம் சக்தியேற்ற முற்படும் எந்த ஒரு படைப்பாளியும் தனது எழுத்தைவிடவும் தனது வாழ்க்கையையே மேலான ஒரு பிரதி என்று கூறுவார். அவருடையது ஒருவித அடைகாக்கும் மொழியாயிருக்கும்.
இத்தகைய அரசியல் கலை இலக்கிய மற்றும் தொடர்பாடற் சூழலில்தான் கருணாகரனின் இத்தொகுப்பு வெளிவருகிறது. இது மேலே சொன்ன கலை இலக்கிய பாரம்பரியத்தின் அதாவது, உண்மையின் ஏதோவொரு பகுதியை சொல்லாதுவிடும் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக உள்ளதா? அல்லது விலகலாக உள்ளதா?
4ஆம் கட்ட ஈழப்போரும் அதற்குப் பிந்திய வாழ்வுமே இத்தொகுப்பின் பாடுபொருட்களாகும். ஆயின் 4ஆம் கட்ட ஈழப்போர்க் களத்தின் உண்மைகள் அனைத்தையும் இத்தொகுப்பு வெளிக்கொண்டு வருகிறதா அல்லது இதில் ஏதும் ‘’விடுபடுதலின் அரசியல்|| உண்டா?
4ஆம் கட்ட ஈழப்போர் அரங்கை குறிப்பாக அதன் இறுதிக் கட்டத்தை கருணாகரன் சாவரங்கு என்று வர்ணிக்கிறார். இக்காலப்பகுதியில் அவர் எழுதிய குறிப்புகளை மரணவெளிக் குறிப்புகள் என்றும் அழைக்கிறார். சிலுவை, இறுதி முத்தம், தண்டனை, உண்மை என்பவற்றிற்கான முகாந்திரம் என்ற தலைப்பின் கீழ்; அவரால் தொகுக்கப்பட்ட கவிதைகளில் மிகச் சிலவே எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கைகளோடு முடிவடைகின்றன. ஏனைய பெரும்பாலானவை அவலச் சுவை மிக்கவைதான். தொகுத்துப் பார்த்தால் இத்தொகுப்பின் உள்ளடக்கத் தொனியாக கிடைப்பது வியாகுலம் தான். இவை வியாகுலக் கவிதைகள் தான்.
போரையும் போர்ப் பிரபுக்களையும் போர் அபிமானிகளையும் போர்ப் பிரபுக்களின் முன் செயலற்றிருந்த கிறிஸ்தவ மதகுருக்களையும் கருணாகரன் சாடுகிறார். அதேசமயம், போரிடும் இரு தரப்பிற்கும் இடையில் சான்ட் விச்சாக நசிபட்ட சாதாரண மக்களை அதிகமதிகம் பிரதிபலிக்க முற்படுகிறார். பொதுசனங்களின் வியாகுலமே பெரும்பாலான கவிதைகளில் வியாபித்து நிற்கிறது.
இப்பொழுது கேள்வி கேட்கலாம். கருணாரகன் கூறுவதைப் போல அது ஒரு சாவரங்கு தானா?
உண்மை.
அவை நரகத்தின் நாட்கள்தான்.
கடல் வழியாகவும் காடுகளின் வழியாகவும் பெருநிலம் சுற்றி வளைக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் விநியோக வழிகளனைத்தும் அடைக்கப்பட்டன. ஆயுதங்களும் போதாது. ஆட்களும் போதாது. இலங்கை அரச துருப்புக்கள் கனரக எந்திரத் துப்பாக்கிகளை ரைபிள்களைப் போல வெகுசாதாரணமாக பயன்படுத்தின. அவற்றின் கொல்லும் தூரம் ஏறக்குறைய 3000 மீற்றருக்கு குறையாமல் இருந்தது. விடுதலைப்புலிகளால் அதிகம் பயன்படுத்தப்பட்ட ரைபிள்களின் கொல்லும் தூரம் ஏறக்குறைய 800 மீற்றர்தான். எனவே, எதிர்த்தரப்பின் கொல்லும் தூரத்;துக்குள் நின்றே விடுதலைப்புலிகள் சண்டை செய்ய வேண்டியிருந்தது. சண்டை தொடங்கிய நாளிலிருந்து முடிவடைந்த நாள் வரையிலும் வேவு விமானம் ஒரு நிரந்தரமான துர்க்குறி போல வானில் தொங்கிக் கொண்டிருந்தது. வேவு விமானத்தின் ரீங்காரம் இரவையும் பகலையும் ஊடுருவிச் சென்றது. ஏறக்குறைய அது 4ஆம் கட்ட ஈழப்போரின் பின்னணி இசையைப் போல் ஆகியிருந்தது. விநியோக வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் புலிகளால் வலிந்தேனும் திரட்டக் கூடியதாகவிருந்த ஒரே ஒரு வளம் மனித வளம்தான். முதலில் தலைப்பிள்ளையைக் கேட்டார்கள். மாவீரர் குடும்பங்களுக்கு விலக்கென்றார்கள். ஆனால் நிலம் சிறுக்கச் சிறுக்க அவர்கள் உருவாக்கிய விதிகளை அவர்களே முறித்தார்கள். ஒரு கட்டத்தில் வலுவுள்ள எல்லோருமே சண்டைக்கு வர வேண்டும் என்று கேட்டார்கள். இது ஏறக்குறைய பாஞ்சாலியைப் பணயம் வைத்துச் சூதாடிய மனோ நிலைக்கு ஒப்பானது. வெற்றியின் மீது பாண்டவர்களுக்கு இருந்த ஆகக் கடைசி நம்பிக்கையே பாஞ்சாலியை பணயம் வைக்கக் காரணமாகியது. விடுதலைப்புலிகளும் அப்படித்தான் நம்பினார்கள். பாண்டவர்கள் பாஞ்சாலியைத் தோற்றபோதும், பாஞ்சாலி துகிலுரியப்பட்டபோதும் ஆடை கொடுப்பதற்கு ஒரு கிருஷ்ணர் இருந்தார். ஆனால், 4ஆம் கட்ட ஈழப்போரில் பாஞ்சாலிகள் துகிலுரியப்பட்டபோது பரமாத்மாக்கள் வரவில்லை. தப்பிச் செல்ல வழியற்றிருந்த ஜனங்களின் கேட்கப்படாத பிரார்தனைகள் குருடும் செவிடுமான உலகத்தின் மூடப்பட்ட மனச்சாட்சியின் கதவுகளில் மோதிச் சிதறின. ஒரு மரணப் பொறியை நோக்கி நாங்கள் எல்லோரும் மந்தைகளைப் போல சாய்த்துச் செல்லப்பட்டோம்.
அது ஒரு பிராந்திய மற்றும் சர்வதேச வியூகமாயிருந்தது. வன்னிக்குள் மற்றொரு வாகரையை உருவாக்குவதே அந்த வியூகத்தின் இறுதித் திட்டமாயிருந்தது. வாகரையில் விடுதலைப்புலிகளிடமிருந்து சனங்களை ’பிதுக்கி” எடுத்ததைப்போல முள்ளிவாய்க்காலிலும் சனங்கள் பிதுக்கி எடுக்கப்பட்டார்கள். அதாவது கடலிலிருந்து மீனை வடித்தெடுப்பதற்காக கடல் இரத்தச் சேறாய் ஆக்கப்பட்டது. இவ்வாறு சனங்கள் பிதுக்கி எடுக்கப்பட்ட ஒரு போர் அரங்கைப் பற்றித்தான் கருணாகரன் பேச முற்படுகிறார். ஆனால், முழுமையான ஒரு குறுக்கு வெட்டுமுகத்தோற்றம் எமக்குக் கிடைக்கவில்லை. ஈழத்துப் போரிலக்கியப் பரப்பில் நிலவிவரும் அதே உண்மையை விழுங்கும் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகவே இத்தொகுப்பும் வெளிவருகிறது. புண்ணிலிருந்து சிதளைப்போல சனங்களைப் பிதுக்கி எடுத்த ஒரு போர் அரங்கைப் பற்றிய முழுமையான ஒரு குறுக்கு வெட்டுமுகத்தோற்றத்தை வரைய முடியாத ஒரு சூழலிற்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இத்தகைய ஒரு பின்புலத்தில் சாவரங்கிற்கு ஒரு தரப்பை மட்டும் பொறுப்பாக்க முடியாது.
மேலும், ஒரு கவிஞராக கலை இலக்கியச் செயற்பாட்டாளராக சமூகத்தில் துருத்திற்கொண்டு தெரிந்த ஒருவர் தப்பிச் செல்ல வழியற்றிருந்த சாதாரண சனங்களில் ஒருவராக மாற நிர்பந்திக்கப்பட்டபோது ஏற்படும் ஆற்றாமை, நிராசை, இழப்பு, விரக்தி போன்றன பீறிட்டுக் கிளம்பும் எல்லா இடங்களிலும் கருணாகரனின் படைப்பாளுமை மிளிரக்காண்கிறோம்.
நம்பிக்கையின் சிதைவும், விசுவாசத்தின் முறிவும் அவருடைய கவிதையைச் செதுக்கிப் பளிச்சிடச் செய்கின்றன. 4ஆம் கட்ட ஈழப்போரின் செமிக்கக் கடினமான உண்மைகளின் நிராகரிக்கப்பட முடியாத இலக்கிய ஆவணங்களாக அவை என்றென்றும் போற்றப்படும்.
ஆனால், இங்கேயுள்ள கேள்வி என்னவென்றால், கருணாகரன் வெறுமனே ஒரு கவிஞர் மட்டும் தானா என்பது. இல்லை. அவர் ஒரு கவிஞர் மட்டுமல்ல, அதற்குமப்பால் அவர் ஒரு கலை இலக்கியச் செயற்பாட்டாளர்.
ஈழப்போர் இலக்கியப் பரப்பில் 1991 இலிருந்து 27 ஆண்டுகளாக தொடர்ச்சியறாது செயற்பட்ட மைய ஆளுமைகளில் அவரும் ஒருவர். கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஈழத்துப் போர் இலக்கியப் பரப்பில் தவிர்க்கப்படவியலாத ஓர் இடை ஊடாட்ட மையமாக அவர் திகழ்ந்தார். அவர் ஒரு போராளியாக இருக்கவில்லை. முடிவெடுக்கும் அதிகாரங்களை பெற்றவராயிருக்கவில்லை. ஆனாலும் ஈழப்போர் இலக்கியத்தின் சிருஷ்டி கர்த்தாக்களில் அநேகமானவர்கள் அவரோடு ஏதோவொரு வகையில் ஊடாடியிருக்கிறார்கள். ஜனவசியமும் விருந்தோம்பலும் உறவுகளை கறுப்பு வெள்ளையாக கையாளாகாத ஓர் அணுகுமுறையும் அவரை தவிர்க்கப்படவியலாத ஆனால், உத்தியோகப்பற்றற்ற ஓர் இடை ஊடாட்ட மையமாக ஸ்தாபித்திருந்தன. தேசிய வாதிகளானாலும் சரி எதிர்த்தேசிய வாதிகளானாலும் சரி அதிருப்தியாளர்களானாலும் சரி எல்லோருக்குமே அவரது வாசல் திறக்கப்பட்டிருந்தது. காலத்துக்குக் காலம் இடப்பெயர்வுகளின் போதெல்லாம் அவர் கட்டிய குடில்களுக்கு சத்ஜெய குடில், ஜெயசிக்குறு குடில்…. என்றெல்லாம் பெயரிட்டார். ஒரு கால கட்டத்தின் படைப்பாளுமைகள் அனைத்தும் இக்குடில்களுக்குள் வந்து புழங்கி இருக்கின்றன. கைநனைத்திருக்கின்றன. ஈழப்போரிலக்கியப் பரப்பில் அவரையொத்த கலை இலக்கியச் செயற்பாட்டுக்காரர் எவருமில்லையெனலாம்.
இப்படியாக தனக்கென்றொரு நிராகரிக்கப்பட முடியாத ஸ்தானத்தைப் பெற்றிருந்த கருணாகரன் தனது கால் நூற்றாண்டு கால கலை இலக்கியச் செயற்பாடுகளின் முடிவில் நாலாங்கட்ட ஈழப்போரின்போது நம்பிக்கைகள் சிதைந்த ஒரு பாழ்வெளிக்குள் எப்படி வந்து சேர்ந்தார்? அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வதனால் அவர் ஏன் வரிசை குலைந்தார்?
அவர் கவிஞன் மட்டுமென்றால் அவரை நோக்கி இப்படிக் கேட்க முடியாது. கவிதை கட்டாயம் நம்பிக்கையில் முடியவேண்டும் என்றில்லை. அல்லது அது ஓர் அரசியல் ஆய்வாகவோ எழுச்சிப் பிரகடனமாகவோ முடியவேண்டும் என்பதுமில்லை. ஆனால், கவிஞன் ஒரு கலை இலக்கியச் செயற்பாட்டுக் காரனாக மேலெழும் போது சமூகம் அவனிடம் நம்பிக்கைகளைக் கேட்கின்றது. நம்பிக்கையின் தொடர்ச்சியை எதிர்பார்க்கிறது. அதிலும் குறிப்பாக இறுதி யுத்தத்தில் நரகத்தின் சிதளைப் போல பிதுக்கி எடுக்கப்பட்டஈழத் தமிழர்கள் ஊன்றிக்கொண்டு எழுவதற்கு நம்பிக்கை வேண்டும். படைப்பாளிகளும், ஆய்வாளர்களும், செயற்பாட்டாளர்களுமே அதைக் கொடுக்க முடியும்.
நமது காலத்தின் அரசியல் வாதிகளில் பலர் இடைமாறு காலகட்டத்தின் கோமாளிகள் ஆகிவிட்டார்கள். இலட்சியவாதிகளில் சிலர் ஓய்வூதியர்கள் ஆகிவிட்டார்கள். தமிழ்த் தேசியம் எனப்படுவது செயலுக்குப்போகத் திராணியற்றவர்கள் எடுத்தணியும் ஒரு மலிவான முகமூடியாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்பொழுது ஈழத்தமிழர்களிற்கு களத்தில் தேவைப்படுவது செயற்பாட்டாளுமைகளே. சிவில் செயற்பாட்டுக் குழுக்களே.
கலை இலக்கியச் செயற்பாட்டுக்குழுக்கள், பண்பாட்டுச் செயற்பாட்டுக்குழுக்கள், பெண்ணியச் செயற்பாட்டுக்குழுக்கள், ஊடகச் செயற்பாட்டுக்குழுக்கள், புலமைத்துவச் செயற்பாட்டுக்குழுக்கள், சட்டச் செயற்பாட்டுக்குழுக்கள், மருத்துவச் செயற்பாட்டுக்குழுக்கள், ஆகக் குறைந்தது ஆன்மீகச் செயற்பாட்டுக் குழுக்கள்….. என்றிவ்வாறாக எல்லாத் தளங்களிலும் சிவில் செயற்பாட்டுக்குழுக்கள் தீவிரமாகத் தொழிற்பட வேண்டிய காலமிது. தமிழ்த் தேசியத்தின் சிவில் அடித்தளத்தைக் கட்டியெழுப்பிப் பலப்படுத்தினாற்தான்; ஈழத்தமிழர்கள் இறந்த காலத்தின் நற்கனிகளைப் பாதுகாக்க முடியும் வருங்காலத்தின் நம்பிக்கைகளை அடைக்காக்கவும் முடியும்.
இ;ப்படியான ஓர் காலச்சூழலில், கருணாகரனைப் போன்ற, கால்நூற்றாண்டு கால கொழுத்த அனுபவத்தைக் கொண்டுள்ள கலை இலக்கியச் செயற்பாட்டாளர்களே நொந்து நூலாகிப்போயுள்ள எமது சமூகத்திற்கு மருந்தாக மாறவேண்டும். நந்திக் கடலிற்குப் பின்னரான ஈழத்துக் கலை இலக்கிய போக்குகளிற்கு முன்னோடிகளாகவும், வழிகோலிகளாகவும் மேலெழ வேண்டும். எழுதிய எல்லாப் பிரதிகளைவிடவும் வாழ்க்கையே மேலான அதிகாரபூர்வமான பிரதி என்பதை நிரூபித்துக் காட்டவேண்டும்.
நிலாந்தன்
மார்கழி 2012
1 Comment