கொரோனாக் கவரேஜ்

இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழரும் ஆவணப்பட இயக்குனருமாகிய சோமிதரன் சில கிழமைகளுக்கு முன் தனது முகநூலில் ஒரு குறிப்பை போட்டிருந்தார். யுத்த காலங்களில் ஊடகங்களில் வரும் நியூஸ் அப்டேட் போலவே கொரோனா அப்டேட்டும்  இருக்கிறது என்ற பொறுள்பட அவருடைய பதிவு அமைந்திருந்தது. யுத்த காலங்களில் வரும் செய்திகளில் கொல்லப்பட்ட படைவீரர்கள் எத்தனை பேர்; விடுதலைப்புலிகள் எத்தனை பேர்;காயப்பட்டவர்கள் எத்தனை பேர்; கைப்பற்றிய ஆயுதங்களின் எண்ணிக்கை எத்தனை போன்ற விவரங்கள் ஒவ்வொரு நாளும் பத்திரிக்கைகளில் வரும். அப்படித்தான் இப்போதும் கொரோனா அப்டேட் எனப்படுவது எத்தனை பேர் சாவு; எத்தனை பேருக்கு நோய்த் தொற்று ;எத்தனை பேர்  தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்;எத்தனை பேர்  குணம் அடைந்திருக்கிறார்கள் போன்ற விவரங்கள் ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் வருகின்றன என்று சோமிதரன் குறிப்பிட்டிருந்தார் .

உலகிலுள்ள பெரும்பாலான ஊடகங்களில் இவ்வாறு கொரோனா  அப்டேட்கள்  வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் உலகத்தில் கொரோனா ஆபத்து  மட்டும்தான் சாவுக்கேதானதா?

உலகில் வைரசால் மட்டும்தான் மக்கள்  கொல்லப்படுவதில்லை. வேறு காரணங்களினாலும் மக்கள் நாளாந்தம் கொல்லப்படுகிறார்கள். இந்தியாவில்  ஒவ்வொரு  ஆண்டும் வீதிவிபத்துக்களால் இறப்பவர்களின் தொகை 1,50.000 என்று கூறப்படுகிறது. இதில் போக்குவரத்தினால் ஏற்படும் வளிமண்ட மாசாகத்தால் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை. இதன்படி இந்தியாவில் ஒரு மாதத்தில்  வீதி விபத்துக்களால் இறப்பவர்கள் 12,500 பேர்.கொரோனா   வைரஸ் தாக்கத்தால் நாடு முடக்கப்பட்டது அதனால் வீதி விபத்துக்கள் அனேகமாக இல்லை.  கூட்டிக் கழித்துப் பார்த்தால் வீதி விபத்துக்களால் கொல்லப்பட்டவர்களை விட  மிகக் குறைந்த அளவு தொகையினரே கொரோனாவால்  கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இது  இலங்கைக்கும் பொருந்தும். அண்மை வாரங்களில் அதிகம் சர்ச்சைக்குள்ளாகிய மருத்துவர் முரளி வல்லிபுரநாதன் யாழ்ப்பாணத்துக்கு புதிய பொறுப்பை ஏற்று வருகை தந்த போது  தனது முகநூலில் இட்ட பதிவு ஒன்றில் ஒரு புள்ளிவிவரத்தை சுட்டிக்காட்டியிருந்தார்.  அதன்படி இலங்கைதீவில் ஒவ்வொரு நாளும் வீதி விபத்துக்களால் கிட்டத்தட்ட 10 பேர் இறப்பதாகவும் நூறுக்கும் குறையாதவர்கள்  காயப்படுவதாகவும்  தொகுத்துக் காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் மட்டுமல்ல ஏனைய பல நாடுகளுகளிலும் இதுபோன்ற புள்ளிவிபரங்கள் இருக்கும்.

கொரோனா வைரஸ் முதலில் தாக்கிய சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் வளிமண்டல  மாசினால் கொல்லப்படுவோரின் எண்ணிக்கை ஏறக்குறைய பதினோரு லட்சம். இது அந்த நாட்டில் கொரோனாவால்  கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட  மிக அதிகம். கொரோனா  வைரஸ் வர முன்னரே சீனாவின் மாநகரங்கள் ஏற்கனவே மாஸ்க் அணிய தொடங்கிவிட்டன. இந்தியாவிலும் தான்.

அதுமட்டுமல்ல உலகம் முழுவதும் இயற்கை மரணங்களால் ஒவ்வொரு நாளும் இறப்பவர்களின் எண்ணிக்கையை விடவும் வைரசினால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவு என்றே கூறப்படுகிறது.

யூனிசெஃப் தரும்  புள்ளிவிபரங்களின்படி 2018ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில்  ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 8 லட்சம் பேர் பட்டினியால் இறந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல உலகம் முழுவதும் பட்டினியால் ஒவ்வொரு நாளும் 24 ஆயிரம் பேர் இறக்கிறார்கள். பொதுமக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட பொது சுகாதார வசதிகள் மறுக்கப்பட்டதால் உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் 10,000 பேர் இறக்கிறார்கள். ஆபிரிக்காவில் மருந்து கொடுத்து  குணப்படுத்தக்கூடிய மலேரியாவால் ஒவ்வொருநாளும் 3000 குழந்தைகள் இறக்கின்றன.

அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் ஈரானிலும் வெனிசூலாவில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்கள் இறக்கிறார்கள்.

சிரியாவில்  நடக்கும் யுத்தத்தில் கடந்த பத்தாண்டுகளில் ஐந்து  லட்சத்துக்கும் குறையாதவர்கள்  கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதாவது ஏறக்குறைய ஒவ்வொரு ஆண்டும் 50,000 பேர் கொல்லப்படுகிறார்கள். அதாவது ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 4 ஆயிரத்துக்கும் குறையாதவர்கள் கொல்லப்படுகிறார்கள். அதுமட்டுமல்ல சிரியாவில் கடந்த பத்தாண்டுகளில் 5000 குழந்தைகள் அடிப்படைச் சுகாதாரவசதிகள் இன்றி கூடாரங்களில் தங்கியிருக்கிறார்கள்.

யேமனில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளால் வழங்கப்படும் ஆயுதங்களால் நேரடியாகவும் யுத்தத்தின் விளைவாக மறைமுகமாக பட்டினியாலும் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொல்லப்படுகின்றன.

சிரியா 

ஆனால் உலகிலுள்ள பேரூடகங்களோ அல்லது பிராந்திய ஊடகங்களோ மேற்சொன்ன புள்ளிவிபரங்களுக்கு எவ்வளவு தூரம் முக்கியத்துவம் கொடுக்கின்றன? கடந்த 5 மாதங்களாக கொரோனாவுக்குக் கொடுக்கப்படும் அதே அளவு முக்கியத்துவம் மேற்படி புள்ளிவிவரங்களுக்குக் கொடுக்கப்பட்டதா?

எனவே உலகம் முழுவதும் கொரோனா அல்லாத வேறு காரணங்களால் அதுவும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட காரணங்களால் அல்லது மனிதர்களால் தடுக்கக்ப்படக்கூடிய காரணங்களால் கோரோனோவால் இறப்பவர்களை விடவும் அதிக தொகையினர் கொல்லப்படுகிறார்கள். ஆனால் இவையெல்லாம் உலக ஊடகங்களில் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கவரேஜ் செய்யப்படுவதில்லை. ஏன்? கொரோனா உலகப்பொது ஆபத்தாக இருப்பதுதான் காரணமா ? அல்லது அது வெள்ளைக்கார நாடுகளை அதிகம் பாதித்தது ஒரு காரணமா ? அல்லது கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் முன்னெப்பொழுதும் ஏற்பட்டதாக ஒரு புதிய ஆபத்து அது என்பது காரணமா?

காரணம் எதுவாகவும் இருக்கலாம். ஆனால் உலகப்பெரும்  ஊடகங்களும் பிராந்திய மற்றும் உள்ளூர் ஊடகங்களும் உலகத்தின் ஒரே பிரச்சினை கொரோனா என்பது போலவும் அதனால்தான் ஒவ்வொரு நாளும் அதிக தொகை கொல்லப்படுவது போலவும் அப்டேட் செய்து வருகின்றன. இந்த சமநிலையில்லாத ஊடகக் கவரேஜிற்கு காரணம் என்ன?

ஊடங்கள்  அறமிழந்து போயினவா? அல்லது அவற்றிடம் உலகப் பொதுத் தரிசனமேதும் இல்லாமற் போனதா? கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எனது நண்பர் ஒருவர் கூறுவது போல ஊடகங்கள் ஸ்கோர் போர்ட் ஆக மாறி விட்டனவா?

ஓர் உலகப்பொது ஆபத்தை குறித்து ஒவ்வொரு நாளும் அப்டேற் செய்யத்  தேவை இல்லையா? என்று கேட்கலாம். செய்யத்தான் வேண்டும். ஆனால் கொரோனாவிற்கும் அப்பால் பல உலகங்கள் உண்டு. அங்கே வைரசை விடவும் வேறு காரணங்களுக்காக அதிக தொகையினர் கொல்லப்படுகிறார்கள்.அவற்றுக்கும் ஊடகங்கள் உரிய கவரேஜ் கொடுக்க வேண்டும். “வைரசுக்கு மருந்து இல்லை. ஆனால் பட்டினிக்கு மருந்து இருக்கிறது. அந்த மருந்தைக் கொடுக்காத படியால்தானே 8 லட்சம் குழந்தைகள் இறக்கிறார்கள் ?” என்று இந்தியாவில் உள்ள  அரசியல் செயற்பாட்டாளரான மருதையன் கேட்டிருக்கிறார்.

அது மட்டுமல்ல்ல பெரும்பாலான ஊடகங்கள் நடுத்தர வர்க்கத்தையும் மேல் நடுத்தர வர்க்கத்தையும் தான் குறிவைக்கின்றன. அதற்கு கீழ் இருக்கும் வர்க்கங்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. தொலைக்காட்சி விவாதங்களும்;வெளிவரும் கட்டுரைகளும் அதிகபட்சம் நடுத்தர வர்க்கத்தின் பிரச்சினைகளைப் பற்றியே உரையாட  முற்படுகின்றன. விதிவிலக்காக சமூகவலைத்தளங்களில் தான் வறிய மக்களின் விவகாரம் அதிகம் கதைக்கப்படுகிறது.

உதாரணமாக இந்தியாவில் ஊரடங்கு சட்டம் காரணமாக  அன்றாடச் சம்பளத்துக்கு வேலை செய்த பலரும் தமது சொந்த மாநிலங்களுக்கு உடனடியாக திரும்ப நிர்ப்பந்திக்கபட்டார்கள். போதிய போக்குவரத்து வசதிகள் இன்றி நடந்தே மாநிலங்களைக் கடந்த பலரும் களைப்பினாலும் பசியினாலும் இறந்திருக்கிறார்கள். இவ்வாறு இறந்தவர்களின் தொகை கிட்டத்தட்ட 300ஐத்  தாண்டும். அதேசமயம் இந்தியாவில் இன்று(25.04.20)வரையிலும் கொரோனாவால் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 775.

ஊரடங்குச்சட்டம் அல்லது சமூக முடக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுவது  அன்றாடம் காய்ச்சிகளும் நாளாந்த சம்பளம் பெறுபவர்களும்தான். இதில் அரசு ஊழியர்களும் ஓரளவுக்கு நடுத்தரவர்க்கமும் சமாளித்துக் கொள்கிறது. அன்றாட சம்பளம் பெறுவோருக்கு வேறு வருமானங்கள் இல்லையென்றால் சேமிப்பைக் கரைக்க வேண்டியதுதான். இவ்வாறு சமூகத்தின் பெரும்பகுதி சேமிப்பைக் கரைக்கும் ஒரு நிலைக்கு வந்துவிட ஒரு சிறு பகுதி வீடுகளில் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு  கொழுப்பைக் குறைப்பதற்கு எப்படி உடற்பயிற்சி செய்யலாம் என்பது குறித்து சமூக வலைத்தளங்களிலும் கைபேசிச் செயலிகளிலும் விவாதித்து வருகிறது. வாட்ஸ்அப், வைபர் போன்ற கைபேசிச் செயலிககளில் பரவும்  வீடியோக்களில் பெரும்பாலானவை நடுத்தர வர்க்கத்தை நோக்கியே வருகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிக்கலாம் ; அதற்கு என்னென்ன உடற்பயிற்சிகள்  செய்யலாம் ; சமூக முடக்கத்தின்  போது வெளி அசைவுகள் குறைவதனால் உடலில் கொழுப்பு கூடி உடலின் எடை கூடினால்  அதற்கு என்னென்ன அப்பியாசங்கள் செய்ய வேண்டும்? என்று ஒருபகுதி சிந்திக்கின்றது.

ஆனால் சமூகத்தின் பெரும் பகுதிக்குச் சேமிப்பு கரைகிறது.  இலங்கைதீவில் அரசாங்கம் ஐயாயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறது ; அரசியல் கட்சிகளும் தன்னார்வ அமைப்புகளும் நிவாரணம் வழங்குகின்றன  இது போதாதா ?என்று சிலர் கேட்கக் கூடும். உண்மைதான் இது ஒத்திவைக்கப்பட்ட தேர்தலுக்கு உரிய ஒரு காலம் என்பதனால் கொரோனாக்  காலத்தில் இலங்கைத்தீவில் ஏழைகளுக்கு ஏதோ சாப்பிடக் கிடைத்திருக்கிறது. ஆனால் ஊரடங்கும் சமூக முடக்கமும் மேலும் நீண்டு  சென்றால் தன்னார்வ குழுக்களும் கட்சிகளும் தொடர்ந்து நிவாரணம் வழங்குமா?

இலங்கையோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் ஏழைகளின் நிலை மோசம்  என்று கூறப்படுகிறது. அங்கே சமூக முடக்கம் ஏழைகளின் வயிற்றில் அடித்திருக்கிறது. அவர்களுக்குக் கொரோனாவை விடவும் பசி பெரிய ஆபத்தாக இருக்கிறது. அதுமட்டுமல்ல தனிமைப்படுத்தல் சுய தனிமைப்படுத்தல் போன்றவற்றிலும் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு.இதை ஒரு இந்திய மருத்துவர் பின்வருமாறு கூறியுள்ளார்.
“தனியாள் இடைவெளி என்பது ஒரு முன்னுரிமை அல்லது சலுகை. அதன் அர்த்தம் என்னவென்றால்  ஒரு பெரிய வீட்டில் நீங்கள் வசித்தால் அதை நீங்கள்  நடைமுறைப்படுத்தலாம் என்பதுதான். அப்படித்தான்  பெற்று தொற்று நீக்கியும் ஒரு சலுகை. அதை வாங்குவதற்கு உங்களிடம் காசு இருக்கிறது என்று பொருள். சமூக முடக்கமும் ஒரு  சலுகை. வீட்டில் இருந்தபடி பொருட்களை பெற உங்களால் முடியும் என்பது இதன் அர்த்தம். கொரோனாவைக்  கட்டுப்படுத்துவதற்கான பெரும்பாலான வழிமுறைகள் வசதி உள்ளவர்களுக்கு உடனடியாக கிடைக்கக்கூடியவை. சாராம்சத்தில் உலகம் முழுவதும் பயணம் செய்யும்  பணக்காரர்களால் பரப்பப்படும் ஒரு நோய்க்கு ஏழைகள் பலியாகிறார்கள்.தனியாள்  இடைவெளியைப் பேணுகின்ற அல்லது  சமூக முடக்கத்தைப்  பேணுகின்ற எங்களில் பலர் நாங்கள்  எவ்வளவு முன்னுரிமை பெற்றவர்கள் என்று  எங்களைப் பாராட்டிக் கொள்ள வேண்டும்.  ஏனெனில் பெரும்பாலான இந்தியர்கள் இவற்றை  நடைமுறைப்படுத்த முடியாதவர்களாக காணப்படுகிறார்கள்.”

அது உண்மைதான் இந்தியாவின் மிகப்பெரிய நகர்ப்புறச் சேரிகளில் எப்படித் தனியாள்  இடைவெளிகளைப் பேணுவது? உலகின் மிக மிகப்பெரிய நகர்ப்புற சேரிகளில் ஒன்றாகிய பம்பாயில் உள்ள தாராவியின் மொத்த பரப்பளவு 0.82  சதுரமைல்கள்  மட்டும்தான். இதில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 8.69 இலட்சம்.  ஆயின் அந்தச் சேரியில் தனிமனித இடைவெளியைத் தீர்மானிப்பது இடமா பொருளாதாரமா? என்று கேட்கப்படுகிறது.”300 குடும்பங்களுக்கு வெறும் 5 கழிப்பறைகள்தான் உள்ளன. காலையில் இதனை பயன்படுத்த அவ்வளவு கூட்டம் இருக்கும்? இந்த சூழலில் எப்படி கொரோனாவிலிருந்து நாங்கள் தப்பிப்பது?” என்று மும்பை தாராவில் சேரியில் வசிக்கும்  தமிழர்கள் கேட்கிறார்கள்.

இந்தியாவில் மட்டுமல்ல இலங்கைத்தீவின் பெருநகரங்களில் குறிப்பாக கொழும்பு மாநகரின் புறநகரப் பகுதிகளில் இருக்கும் தோட்டங்கள்  என்றழைக்கப்படும் சனச் செறிவு மிக்க சேரிகளின் நிலைமையும் இத்தகையதே.

எனவே வைரஸை கட்டுப்படுத்துவதில் உலகம் எல்லாருக்கும் சமமாக இருக்கிறது என்று பொருள் இல்லை. நமது ஊடகங்களும் அவற்றை சமமாக கவரேஜ்  செய்வதில்லை.  நோபல் பரிசு பெற்ற இந்தியரான அமர்தியா சென் ஒருமுறை கூறியிருந்தார்……..நடுநிலை  ஊடகங்கள் இயங்கும் ஒரு சமூகத்தில் பசி பட்டினி இயற்கை பேரழிவு போன்றன சமூகத்தை தாக்குவதில்லை. ஏனெனில் அந்த ஊடகங்கள் வரவிருக்கும் அனர்த்தத்தை முன்கூட்டியே எச்சரித்து விடும். அதனால் உஷார் அடைந்த அரசுகள் முன்கூட்டியே தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு விடும். என்று.

அப்படி என்றால் கோவிட் -19இன் வருகையை உலக ஊடகங்களால் ஏன் முன்னுணர முடியல்லை? அது உலகத்தைத் தாக்கிய பின்னராவது இனிமேலும் அதன் அடுத்த வளர்ச்சியான ஒரு வைரஸ் மனித குலத்தை தாக்குவதற்குற்கு முன்பாக அரசுகளையும் சமூகங்களையும் உஷார் படுத்த வேண்டிய பொறுப்பு தயார்படுத்த வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. ஓர் உலகப்   பெரும் தோற்று நோய்க்காலத்திலாவது கற்றுக் கொள்வோமா? வைரஸ் தன்னை அப்டேற் செய்து கொள்ளமுன் நாங்கள் எங்களை அப்டேற் செய்து கொள்வோமா?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *