நினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை தனிப்பட்ட முறையில் நினைவு கூர்வது. அது தனிநபர் உரிமை தொடர்பானது. அதற்கு அரசியல் பரிமாணம் ஒப்பீட்டளவில் குறைவு. பண்பாட்டு பரிமாணமும் உளவியல் பரிமாணமும்தான் அதிகம்.ஆனால் பொது நினைவு கூர்தல் என்பது முழுக்க முழுக்க அரசியல் பரிமாணத்தைக் கொண்டது. பண்பாட்டு உளவியல் பரிமாணத்தைக் கொண்டது. அது ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டுரிமை சம்பந்தப்பட்டது.
ஒரு பொது நினைவு கூர்தலின்போது ஒரு பொது இடத்தில் மக்கள் ஒன்று திரண்டு இறந்தவர்களை நினைவு கூர்கிறார்கள். இதனால் கூட்டுத் துக்கமானது கூட்டு ஆக்க சக்தியாக அரசியல் செயலாக்க விசையாக மாற்றப்படுகிறது. அதேசமயம் துக்கம் கூட்டாக வெளிப்படுகையில் அங்கே ஒரு குணமாக்கற் செய்முறையும் உண்டு. அதாவது உளவியல் ரீதியாக அக் கூட்டுத்துக்கம் குணமாக்கப்படுகிறது. அது ஓர் ஆற்றுப்படுத்தல் செய்முறை.
ஆனால் அரசாங்கம் கூட்டு நினைவு கூர்தலைத் தடை செய்திருக்கிறது. ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தமிழ் மக்கள் தங்கள் தங்கள் வீடுகளில் தனிப்பட்ட முறையில் நினைவு கூரலாம் என்று கூறிவிட்டார். ஆனால் பொது இடங்களில் கூடி அதை ஓர் அரசியல் நிகழ்வவாக அனுஷ்டிப்பதற்கு தடை உண்டு என்றும் கூறினார். அரசாங்கத்தின் உபகரணங்களான நீதிமன்றமும் போலீசும் அதை உறுதிப்படுத்தின. பயங்கரவாதத் தடைச்சட்டம் கோவிட்-19 தனிமைப்படுத்தல் சட்டம் ஆகிய இரண்டு சட்டங்களின் அடிப்படையில் பொது இடங்களில் கூடி நினைவு கூர முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
இப்படிப்பட்டதோர் அரசியல்; உளவியல்; மருத்துவச் சூழலுக்குள் தமிழ் கட்சிகள் நினைவுகூர்தலை எவ்வாறு ஒழுங்குபடுத்தின?
அவர்கள் வழமைபோல துயிலும் இல்லங்களைத் துப்பரவாக்கினார்கள். போலீஸ்காரர்களோடு வாக்குவாதப்பட்டார்கள். அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்கள். நீதிமன்றங்களுக்கு போனார்கள். வழக்குப் போட்டார்கள். முடிவில் நினைவுகூர்வதற்கு சட்டப்படி தடை என்று தீர்ப்பை வாங்கினார்கள். அதன்பின் மக்கள் அவரவர் தங்களுடைய வீடுகளில் இருந்தபடி விளக்குகளை ஏற்றி நினைவு கூரலாம் என்று அறிக்கை விட்டார்கள்.
அவர்கள் அறிக்கை விட்டார்களோ இல்லையோ சனங்கள் வீடுகளில் விளகேற்றினார்கள். ஆனால் வெளிப்படையாக தங்கள் வீட்டின் மதிற் சுவரில் ஒரு சுட்டியை எத்தனைபேர் ஏற்றி வைத்தார்கள் ? அல்லது பொது இடங்களில் ஒரு சுடரை ஏற்றி அதை அனுஷ்டித்தவர்கள் எத்தனை பேர்?அல்லது மணிகளை ஒலித்து அஞ்சலித்த ஆலயங்கள் எத்தனை? கடந்த பத்தாண்டுகளாக துணிந்து செயற்பட்ட யாழ் பல்கலைக்கழகம் இந்தமுறை ஒதுக்கி விட்டதா?
இது கடந்த மே18ன் போதும் அவதானிக்கப்பட்டது. கோவிட்-19 சூழலுக்குள் மே18 ஐமக்கள் மயப்படுத்துவதில் இருக்கக்கூடிய இடர்களை கவனத்திலெடுத்து குறிப்பிட்ட நேரத்தில் எல்லா ஆலயங்களிலும் மணிகளை ஒலிக்கக் கேட்பதென்றும் வீடுகளில் சுடரேற்றுமாற்று கேட்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.யாழ் சர்வமத சபை அது தொடர்பில் அறிக்கையும் விட்டது. ஆனால் எத்தனை ஆலயங்களில் மணி ஒலிக்கப்பட்டது? எத்தனை வீடுகளில் சுடர் ஏற்றப்பட்டது?
அதேசமயம் திலீபன் நினைவு நாளை முன்னிட்டு கடைகளை அடைக்குமாறு தமிழ் கட்சிகளின் கூட்டு கேட்டபோது முஸ்லீம்களும் சேர்ந்து கடைகளை அடைத்தார்கள். அது ஒரு வெற்றி பெற்ற கடையடைப்பு. ஆனால் அதே போல ஒரு மக்கள் மயப்பட்ட நினைவு கூர்தலை ஏன் ஒழுங்குபடுத்த முடியவில்லை?
பெரும்பாலான தமிழ்க் கட்சிகள் மக்கள் மயப்பட்ட நினைவுகூர்தல் என்று விளங்கி வைத்திருப்பது ஒரு பொது இடத்தில் தொகையான மக்களைக் கூட்டி விளக்கு ஏற்றி துக்கிப்பதைத்தான் . அதாவது ஒரு பொது இடத்தில் அதிக தொகை மக்களை கூட்டும்பொழுது அது ஒரு உணர்ச்சிகரமான நினைவு கூர்தலாக இருக்கும். கூட்டுத் துக்கம் உணர்வுபூர்வமாக வெளிப்படும். அப்படிப்பட்டதோர் கூட்டு நிகழ்வில் அரசியல்வாதிகளுக்கு அதிகம் ஆதாயம் உண்டு. அக்கூட்டுத் துக்கத்தை அவர்கள் கொத்து வாக்குகளாக மாற்றி எடுக்கலாம். நாயகர்கள் போல காட்சி தரலாம். படம் காட்டலாம்.
எனவே பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகள் நினைவு கூர்தலை ஓர் அரசியல் நிகழ்வாக ஒரு பொது வைபவமாக ஒழுங்குபடுத்தவே விரும்புகிறார்கள். அதற்குத்தான் வழக்காடுகிறார்கள்.
ஆனால் நினைவுகூர்தலை மக்கள் மயப்படுத்துவது என்பது ஒரு பொது இடத்தில் கூட்டத்தைக் கூட்டுவது மட்டும் அல்ல. அது அதைவிட ஆழமானது.
தமிழ் மக்கள் தனிப்பட்ட முறையில் இறந்தவர்களை நினைவு கூரும் நாட்களான ஆடி அமாவாசை,சித்திராப் பௌர்ணமி, அனைத்து மரித்தோர் தினம் போன்றவற்றை வீடுகளில் இருந்தபடியே அனுஷ்டிக்கிறார்கள். விளக்கீடு தீபாவளி போன்றவற்றையும் வீடுகளில் இருந்தபடியே அனுஷ்டிக்கிறார்கள். அவை மதம்சார் பண்பாட்டு நாட்கள் ஆகும். அவற்றை அனுஷ்டிக்குமாறு யாரும் தமிழ் மக்களுக்கு அறிக்கை விடுவதில்லை.
நினைவுகூர்தலையும் ஏன் அவ்வாறு ஒரு பண்பாடாக பரவலாக்க முடியவில்லை? இது தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகளிடம் ஏதும் உரையாடல் நடந்திருக்கிறதா? துயிலும் இல்லங்களை துப்பரவாங்குவது ;அரசாங்கத்திடம் வினயமாகக் கேட்பது; அல்லது நீதிமன்றங்களில் வழக்காடுவது கடைசியில் அறிக்கை விடுவது என்பவற்றுக்கும் அப்பால் நினைவுகூர்தலை எப்படி ஒரு பண்பாட்டு நிகழ்வாக மக்கள் மயப்படுத்துவது என்பது குறித்து பொருத்தமான அரசியல் தரிசனங்களும் செயற்பாட்டுத் தரிசனங்களும் தமிழ் அரசியல்வாதிகளிடம் உண்டா?அல்லது தமிழ் அரசியற் செயற்பாட்டாளர்களிடம் உண்டா?
கடந்த மே18ன் போதே இதை யோசித்திருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் திலீபனின் நினைவு நாளிலாவது இதுகுறித்து யோசித்திருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் யோசிக்கும் அளவுக்கு தொகுக்கப்பட்ட ஒரு ஒட்டுமொத்தத் தரிசனம் எத்தனை அரசியல்வாதிகளிடம் உண்டு?
எல்லாருமே அந்தந்த போகத்துக்குச் சிந்திப்பவர்களதான். அந்தந்த போகத்துக்கு அறிக்கை விடுபவர்கள்தான். அந்தந்த போகத்துக்கு நாடாளுமன்றத்தில் முழங்குபவர்கள்தான். அந்தந்த போகத்துக்கு படம் காட்டுபவர்கள்தான். மாறாக நினைவுகூர்தலை ஒரு பண்பாடாக கட்டியெழுப்புவது என்று சொன்னால் அதை எப்பொழுதிருந்தோ தொடங்கியிருக்க வேண்டும். அதற்கு ஆழமான அரசியல் தரிசனம் வேண்டும். விசுவாசம் வேண்டும். அர்ப்பணிப்பு வேண்டும்.
திலீபன் நினைவு நாளின்போது நீதிமன்றம் தடை விதித்தது. அதனால் நீதிமன்றம் தடை விதிக்காத ஒரு பிரதேசத்தில் அரசியல்வாதிகள் திலீபனை நினைவுகூர்ந்தார்கள். அது ஒரு மக்கள் பயப்படாத நினைவு கூர்தல். ஆனால் அதன்பின் ஒழுங்கு செய்யப்பட்ட கடையடைப்பு முழு வெற்றி பெற்றது. அது ஒரு மக்கள் மயப்பட்ட நிகழ்வு. தமிழ் மக்கள் அந்தக் கடை அடைப்புக்கு முழு ஆதரவு கொடுத்தார்கள். கடைகளைப் பூட்டுவதற்கு ஒருவரும் பயப்படவில்லை. முஸ்லிம் மக்களும் அதில் இணைந்தார்கள்.
ஆனால் வீடுகளின் வெளி மதில்களில் சுட்டிகளை ஏற்றுங்கள் ஆலயங்களில் மணிகளை ஒலிக்கச் செய்யுங்கள் என்று கேட்கும் பொழுது ஏன் பொதுமக்களும் பொது நிறுவனங்களும் பின்னடிக்கின்றன?
விடை மிக எளிமையானது. பயம்தான் காரணம். பயத்தினால்தான் மக்கள் வெளிப்படையாகச் சுட்டிகளை ஏற்றி வைக்க அச்சப்படுகிறார்கள். அவ்வாறு சுட்டிகளை ஏற்றுவதன் மூலம் தங்கள் பாதுகாப்பைக் குறைத்துக் கொள்ள அவர்கள் தயாரில்லை. வெளிப்படையாக சுட்டிகளை ஏற்றி மணிகளை ஒலிக்கச் செய்து புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு ஆளாக அவர்கள் தயாரில்லை. இந்த அச்சம்தான் மக்கள் ஒன்று திரள்வதற்கு தடையாக இருக்கிறது. இந்த அச்சத்தை போக்க வேண்டியது அரசியல்வாதிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும்தான்.
கடைகளை அடைக்கும் பொழுது எல்லோரும் ஒன்றாகக் கடைகளை மூடாவிட்டால் கடைகளை மூடிய சிலரை பொலிசோ புலனாய்வுத் துறையோ விசாரிக்கும். எல்லோரும் கடைகளை ஒருமித்து மூடினால் எத்தனை பேரை விசாரிப்பது ?இதுதான் மக்கள் மயப்படுவதன் முக்கியத்துவம் ; பலம். அதாவது திரட்சிதான் பலம். திரட்சியின் அளவே பலம்.
மக்கள் எல்லோரும் வீட்டு மதிலில் சுட்டிகளை ஏற்றினால் எல்லோரையும் விசாரிக்க முடியாது. எனவே நினைவுகூர்தலை மக்கள் மயப்படுத்துவது என்பது ஆகக்கூடுதலான மக்களை அதில் மானசீகமாகப் பங்களிக்க செய்வதுதான். அதற்கு கட்சிகள் என்ன செய்யலாம்?
தேர்தல் காலங்களில் வீடு வீடாகச் சென்று ஸ்டிக்கர்களை ஒட்டுவது போல கட்சி தொண்டர்களை அனுப்பி ஒவ்வொரு வீடாக சுட்டிகளை ஏற்றுமாறு கேட்டிருந்தால் என்ன? தேர்தல் காலங்களில் தெருத்தெருவாக சென்று பிரச்சாரம் செய்வதுபோல ஒவ்வொரு கோவிலாக சென்று மணிகளை ஒலிக்குமாறு கேட்டால் என்ன? ஒரு அரசியல் நிகழ்வை மக்கள் மயப்படுத்துவது என்று சொன்னால் அதற்காக மக்கள் மத்தியில் இறங்கி வேலை செய்வதற்கு பொருத்தமான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். தேர்தல் காலங்களில் காசைக் கொடுத்து அவ்வாறான கட்டமைப்புக்களை உருவாக்குவதை போன்றதல்ல இது. உணர்வுபூர்வமான கிராம மட்ட கட்டமைப்புக்கள் எத்தனை கட்சிகளிடம் உண்டு? அப்படிப்பட்ட கட்டமைப்புகள் இருந்திருந்தால் ஏன் கிராமங்கள் தோறும் பரவலாக சுட்டிகளை ஏற்றுமாறு மக்களைக் கேட்க முடியாமல் போனது என்ற கேள்விக்குக் கட்சிகள் பதில் கூறட்டும்.
இது விடயத்தில் அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஒரு கல்லில் பல வெற்றிகளை பெற்றிருக்கிறது. முதலாவது வெற்றி- நினைவுகூர்தலைத் தடை செய்ததன் மூலம் சிங்கள-பௌத்த வாக்காளர்களை சந்தோஷப்பட வைத்திருக்கிறது.
இரண்டாவது வெற்றி- நினைவுகூர்தலைத் தடை செய்ததன் மூலம் நினைவு கூர்தலை ஒரு கூட்டு உரிமையாக ஏற்றுக்கொள்ளும் நிலைமாறுகால நீதிக்கு எதிரான கூர்மையான செய்தியை வெளிப்படுத்தியிருக்கிறது. அதாவது ஐநாவின் 30/1 தீர்மானத்துக்கு எதிரான ஒரு செய்தி அது.
மூன்றாவது- அதை ஒரு சட்ட விவகாரமாகச் சுருக்கியது. அதாவது ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டு உரிமையை சட்ட விவகாரமாக சுருக்குவதற்கு அந்த மக்களின் பிரதிநிதிகளையே மறைமுகமாக அதன் கருவிகளாக மாற்றியது.
நாலாவது- ஒட்டுமொத்தத்தில் நினைவு கூர்தலை மக்கள் பயப்படாத ஒரு நிகழ்வாக மாற்றியது.
ஐந்தாவது பத்து ஆண்டுகளின் பின்னரும் தமிழ் மக்களை பயத்தால் பிரித்து வைத்திருப்பது.நீதிமன்றத் தீர்ப்புக்களின் பின்னணியில் படைத்தரப்பு மற்றும் போலிசின் அதிகரித்த பிரசன்னத்தின் மத்தியில் சனங்கள் மேலும் பயபடுகிறார்கள்.
இது விடயத்தில் பயப்படாது துணிந்து ரிஸ்க் எடுக்கும் சிவாஜிலிங்கம் தமிழ் அரசியல் பரப்பில் ஒரு சீரியஸ் இல்லாத ஆளாகப் பார்க்கப்படுகிறார். கடந்த தேர்தலில் அவருக்கு கிடைத்த வாக்குகள் கிட்டத்தட்ட 10,000. அவருடைய துணிச்சலுக்கு தமிழ் மக்கள் வழங்கிய வெகுமதி அவ்வளவுதான். அவருடைய துணிச்சலை ஒரு சீரியஸில்லாத விவகாரமாக மாற்றியது துணிச்சலில்லாத; ரிஸ்க் எடுக்காத ஏனைய தமிழ் அரசியல்வாதிகள்தான்.
அதேசமயம் நினைவுகூர்தலை ஒரு சட்ட விவகாரமாகச் சுருக்கி அதை தடுத்த அரசாங்கம் ஒரு விடயத்தை வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ளத் தவறிவிட்டது. ஒரு கூட்டுத் துக்கத்தை வெளி வழிய விடுவது ஒரு குணப்படுத்த செய்முறையாகும். ஒரு கூட்டுத்துக்கம் அடக்கப்படுமாக இருந்தால் அது ஒரு கட்டத்தில் கூட்டு ஆவேசமாக; கூட்டுக் கோபமாக குமுறிக் கொண்டு வெளியேவரும். அதைத்தான் தமிழின் மூத்த கவிஞர்களில் ஒருவராகிய பொன்னம்பலம் அழகாகச் சொல்வார் அடக்குமுறை என்பது விடுதலையைப் பிரசவிக்கும் மருத்துவிச்சி என்று. அது “அதிகாரம் புரியாத ஒரு சமன்பாடு” என்று.