குமுதினி ஏன் தனிய வருகிறாள்?

கடலம்மா எனந்தத் தீவுகளைத் தனியே விட்டாய்?

பசுத்தீவு ருத்திரனின் நூலுக்கு எழுதப்பட்ட குறிப்பு.

தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் “லங்கா ராணி “என்ற பெயருடைய ஒரு கப்பல் இலக்கியமாகியது. ஈழத்துப் போரிலக்கியப் பரப்பில் தொடக்ககால நாவல்களில் அதுவும் ஒன்று.லங்கா ராணிக்கு அடுத்தபடியாக லங்கா ராணியை விடவும் அதிகமாக இலக்கியமாக்கப்பட்ட ஒரு பயணிகள் போக்குவரத்துப் படகு குமுதினிதான். லங்கா ராணியும் ஒரு துயரக் கப்பல்தான். 83ஜூலை இன வன்முறையிலிருந்து தப்பியவர்களை ஏற்றிக்கொண்டு அது காங்கேசன் துறைக்கு வந்தது. அது போலவே குமுதினியும் காயங்களையும் பிணங்களை சுமந்து கொண்டு குறிகட்டுவானுக்கு வந்தது. சவப்பெட்டிகளைச் சுமந்து கொண்டு நெடுந்தீவுக்கு சென்றது.

குமுதினியின் மீது முதல் கவிதையை நான் எழுதினேன். “கடலம்மா”என்பது அக்கவிதையின் தலைப்பு. அதன்பின் சு. வில்வரத்தினம், மு. பொன்னம்பலம் ஆகியோர் எழுதினார்கள். குமுதினியில் கொல்லப்பட்டவர்களின் சவப் பெட்டிகளை நெடுந்தீவுக்கு அனுப்பிவைக்கும் நாளன்று இந்த மூன்று கவிதைகளும் பிரசுரிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் புங்குடுதீவு மக்களின் சார்பாக வினியோகிக்கப்பட்டது.

அதிலிருந்து குமுதினி இலக்கியம் ஆகியது. அது ஒரு துயர இலக்கியம். காயங்களின் இலக்கியம்.இனப்படுகொலையின் இலக்கியம்.இவ்வாறு குமுதினி மீது பாடப்பட்ட கவிதைகளின் மேலும் ஒரு தொகுப்பே இது.நெடுந்தீவைச் சேர்ந்த பசுத்தீவு உருத்திரன் இதை எழுதியிருக்கிறார். இந்த அறிமுகக் குறிப்பு அவரைப்பற்றியதோ அல்லது அவருடைய கவிதைகள் பற்றியதோ அல்ல.மாறாக குமுதினியை நினைவுகூர்வது என்பதை அதற்குரிய ஆழமான சமூகப் பொருளாதார அர்த்தத்தில் நான் பார்க்க விழைகிறேன்.

குமுதினிப் படுகொலையை நினைவுகூர்வது என்பது அதில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்வது மட்டுமல்ல,அது அதைவிட ஆழமானது.நடுக்கடலில் வைத்து கொல்லப்படும் அளவுக்கு பாதுகாப்பற்ற நிச்சயமற்ற ஒரு கடல் வழியில் குமுதினி அப்பொழுதும் பயணம் செய்தாள், இப்பொழுதும் பயணம் செய்கிறாள்.நிச்சயமற்ற பாதுகாப்பற்ற நீண்ட கடல் பயணம்தான் அவள் தனித்து விடப்பட்டுத் தாக்கப்பட காரணம்.

குமுதினிப் படுகொலை நிகழ்ந்து 39 ஆண்டுகள் ஆகிவிட்டன.ஆனால் யாழ்ப்பாணத்தின் தூரத்து தீவுகளுக்கான பயணங்கள் இப்பொழுதும் நிச்சயமற்றவைகளாகவும் தொடர்ச்சியற்றவைகளாகவும்தான் காணப்படுகின்றன. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த 14 ஆண்டுகளின் பின்னரும் நிலைமை பெரிய அளவிற்குத் தேறவில்லை. 

யாழ்ப்பாணத்தின் தூரத் தீவுகளை யாழ்ப்பாணத்துடன் இணைக்கத் தேவையான தொலைத்தொடர்பு வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் குமுதினி தாக்கப்படும்போது எப்படி இருந்தனவோ அதிலிருந்து சிறிதளவே முன்னேறியிருக்கின்றன. 

இலங்கைத் தீவிலேயே போர் காரணமாகவும் பொருளாதாரக் காரணங்களுக்காகவும் நாட்டுக்குள்ளும் நாட்டுக்கு வெளியேயும் இடம்பெயர்ந்த மற்றும் புலம்பெயர்ந்த அதிக தொகை மக்களைக் கொண்ட ஒரு பிரதேசமாக தீவுப்பகுதி காணப்படுகிறது. இலங்கைத் தீவில் ஆளில்லா வீடுகளை அதிகமாகக் கொண்ட ஒரு பகுதி என்றால் அது தீவுகள்தான். ஒவ்வொரு ஆண்டும் நயினாதீவு உற்சவ காலத்தில் லட்சக்கணக்கானவர்கள் புங்குடுதீவைக் கடந்து நயினாதீவுக்கு போய் வருகிறார்கள். இதில் எத்தனை பேர் புங்குடுதீவை எட்டிப் பார்க்கிறார்கள்? ஆளரவம் குறைந்த புங்குடுதீவின் தெருக்களின் வழியே ஆயிரக்கணக்கானவர்கள் ஆண்டுதோறும் நயினாதீவுக்கு போய் வருகிறார்கள்.

தீவுப்பகுதி போருக்கு முன்னரே பொருளாதாரக் காரணங்களுக்காக இடம்பெயரத் தொடங்கிவிட்டது.குடிநீர் பற்றாக்குறை,நிச்சயமற்ற தொடர்ச்சியற்ற போக்குவரத்து, மருத்துவ வசதிக் குறைவு, கல்வி வாய்ப்புகள் ஒப்பீட்டளவில் குறைவு….போன்ற இன்னோரன்ன காரணங்களுக்காக தீவுகளிலிருந்து மக்கள் போருக்கு முன்னரே உள்நாட்டுக்குள் இடம் பெயரத் தொடங்கி விட்டார்கள்.போர் அதை மேலும் அதிகப்படுத்தியது.ஆயுத மோதல்கள் முடிந்து 13 ஆண்டுகளான பின்னரும் தீவுப்பகுதி சனச்செறிவு குறைந்த ஒரு பகுதியாகத்தான் காணப்படுகிறது.சு.வில்வரத்தினம் எழுதியது போல தீவுப்பகுதிகளில் இப்பொழுதும் காற்றுவெளிக் கிராமங்களே அதிகம் உண்டு. தீவுகளிலிருந்து இப்பொழுதும் மக்கள் பல்வேறு காரணங்களுக்காக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.குறிப்பாக நெடுந்தீவின் சனச்செறிவு மேலும் குறைந்ததே தவிர கூடவில்லை. இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் அண்மை மாதங்களில் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நெடுந்தீவில் இருந்து மக்கள் மேலும் இடம்பெயர்வதாக ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. தீவுகளின் துயரம் அது.

ஒருபுறம் தீவுகள் தனித்து விடப்படுகின்றன. ஆட்களற்றுப் போகின்றன.இன்னொருபுறம் தமது புவிசார் அரசியல் மற்றும் படைத்துறை நலன்களை முன்னிறுத்தி தீவுகளில் மீளப் புதுப்பிக்கும் எரிசக்தி திட்டங்களை யார்  நிறுவுவது? என்று இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஒரு போட்டி நடந்தது. அதில் தற்போது இந்தியா ஜெயித்திருக்கிறது. 

எனவே குமுதினியை நினைவுகூர்வது என்பது நெடுந்தீவு ஏன் தனித்து விடப்படுகிறது? ஏனைய தீவுகள் ஏன் தனித்து விடப்படுகின்றன? தீவுகளை சனக்கவர்ச்சி உள்ள வாழிடங்களாக மாற்றுவது எப்படி?தீவுகளை நோக்கி ஜனங்களை எவ்வாறு கவர்ந்திழுப்பது? என்று சிந்திப்பதுதான். அதற்குரிய சமூகப் பொருளாதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும்.

தீவுப்பகுதியில் இருந்து வெளியேறி புலம்பெயர்ந்து வாழும் சனத்தொகை மிகப்பெரிது. தீவுகளில் இடித்து திருத்தப்படும் கோவில்களுக்கான நிதி புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் இருந்துதான் வருகிறது. முதல் ஆண்டு கட்டப்பட்ட கோவிலின் ஒரு பகுதியை அடுத்தடுத்த ஆண்டுகளில் இடித்து அதைவிட பெரிதாக கட்டும் அளவுக்கு நிதி உதவி கிடைக்கிறது.  இந்த நிதியை குடிநீர், கல்வி, மருத்துவம், போக்குவரத்து போன்ற பல்வேறு விடயங்களை நோக்கியும் திருப்பினால் என்ன? அதற்கு ஒரு நீண்டகாலத் திட்டம் வகுக்கப்பட வேண்டும். 

தனித்துவிடப்பட்ட தீவுகளை எப்படி தங்களுக்கு இடையேயும் பெருநிலத்தோடும்  உலகின் எனைய பாகங்களோடும் நிச்சயமான தொடர்ச்சியறாத வழிகளின் மூலம் இணைப்பது என்று சிந்தித்து சமூகப் பொருளாதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும். நடுக்கடலில் தனித்து விடப்பட்டு தத்தளித்த குமுதினியை நினைவுகூர்வது என்பது மெய்யான பொருளில் அதுதான்.

 

12.05.2022

யாழ்ப்பாணம் 

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *