யாழ் நகர மண்டபத்தை மீளக்கட்டியெழுப்புதல்… சாம்பலிலிருந்து உயிர்த்தெழுவது என்றால் என்ன?

பெப்ரவரி 12ஆந் திகதி யாழ் தினக்குரலில் ஒரு முழுப்பக்க விளம்பரம் வந்திருந்தது.  அது பொதுமக்களுக்கான ஒர் அறிவித்தல். அது பின்வருமாறு தொடங்குகிறது.  “மக்களால் மக்களை ஆட்சி செய்யும் மக்களின் யாழ்ப்பாண மாநகர சபையின் அழிந்த நகர மண்டபத்தை அதன் சாம்பலில் இருந்து மீண்டும் உயிரூட்டி எழுப்பி தொலைந்த அந்தக் கோவிலை டாக்டர் சுப்ரமணியம் சிறுவர் பூங்காவின் தோற்றமுள்ள அதே திடலில் இருந்து நிறுவி, யாழ்ப்பாண நகரின் கம்பீரத்தை மீளக்கொண்டுவரும் பல்வேறு கடந்தகால எத்தனங்களின் தொடராக வந்துள்ள பிந்தியதை பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்ள மாநகரசபையினர் நாம் விரும்புகிறோம்….”

இவ் விளம்பரத்தில் உத்தேச நகரசபை மண்டபத்தின் வெளித்தோற்றப் படங்கள் வௌ;வேறு பார்வைக் கோணங்களிலிருந்து வரையப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருந்தன.  இது  தொடர்பில் மக்களின் அலோசனைகளும், கருத்துக்களும் கேட்கப்பட்டிருந்தன.  அதன்பின் இறுதியாக்கப்பட்ட வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு நகரமண்டபம் கட்டப்படும்.  பொதுமக்கள் தமது கருத்துக்களையும்  ஆலோசனைகளையும் கடந்த மாதம் 25ஆம் திகதிக்கு முன் அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டிருந்தார்கள். மேற்சொன்ன திகதி கடந்து ஏறக்குறைய ஒரு மாதத்தின் பின் இக்கட்டுரை எழுதப்படுகிறது.  ஜெனீவா அமளிக்குள் இந்த விவகாரம் பின்தள்ளப்பட்டுவிட்டது.

மேற்படி விளம்பரம் வெளியான பின் யாழ்ப்பாணத்தில் உள்ள மூத்த பிரஜைகள் சிலர் உத்தேச வரைபடம் பழைய நகர மண்டபத்தை நினைவூட்டவில்லை என்று கருத்துத் தெரிவித்தாரகள்;. மிக உயர்ந்த அடித்தளத்தின் மீது மேற்கத்தேய நிர்வாக மையங்களை அல்லது கலைக்கூடங்களை நினைவுபடுத்துவதாக உத்தேசவரைபடம் அமைந்திருப்பதாக சிலர் கருத்துத்தெரிவித்தார்கள்.  இது தொடர்பில் அக்கறையுள்ள தறைசார் ஞானமுள்ள சிலர் உத்தேச  வரைபடமானது பழைய கட்டிடத்தில் இருந்த அழகு எளிமை, அமைதி, தன்னடக்கம் போன்றவற்றை கொண்டிருக்கவில்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

மேற்சொன்ன வாதப்பிரதிவாதங்கள் அனைத்தும் யாழ்ப்பாணத்தின் ஒரு சிறு சுற்றுக்குள்ளேயே நிகழ்ந்து கொண்டிருக்க பெரும்பாலான யாழ்ப்பாணத்தவர்கள் தம்மைத் தீர்மானிக்கும்  பல விவகாரங்களை எப்படி சுரத்தின்றிக் கடந்து போகிறார்களோ அப்படியே இந்த விவகாரத்தையும் ஒரு பத்திரிகை விளம்பரமாகக் கடந்து சென்றுவிட்டார்கள்.

இவ்வுத்தேச வரைபடத்தை உருவாக்கும் சந்திப்புக்களில் மக்கள் பிரதிநிதிகளும், கல்வியியாளாளர்களும், பெரியோர்களும் ஆலோசனைகளை தெரிவித்ததாக மேற்படி விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பபில் இரண்டு சந்திப்புக்கள் இடம்பெற்றதாக சம்பந்தப்பட்டவர்கள் கூறுகிறார்கள். வடமாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், தொழில்சார் வல்லுனர்கள் யாழ்பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும் மரபுரிமைச் சின்னங்கள் தொடர்பில் தொடர்ச்சியாகக் கட்டுரைகளை எழுதிவருபவருமான பா.அகிலன் ஆகியோர் இந்த சந்திப்புக்களில் பங்குபற்றியிருக்கிறார்கள்.  கட்டடக்கலைஞர் சயன் குமாரதாஸ் ஒரு தொண்டாக ஊதியம் பெறாது இப்பொறுப்பை ஏற்றிருக்கிறார்.  சந்திப்புக்களில் அவர் பங்குபற்றவில்லை. சந்திப்புக்களின் பதிவுகள் அவருக்கு அனுப்பப்பட்டனவாம். மேற்படி சந்திப்புக்களின் பின் உருவாக்கப்பட்டதே உத்தேச வரைபடம்.

ஒரு நகர மண்டபத்தை மீளக்கட்டியெழுப்பும் போது அதில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விவகாரங்கள் எவையெவை? குறிப்பாக தினக்குரல் விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல “சாம்பலில் இருந்து மீண்டும் உயிரூட்டியெழுப்பி தொலைந்த அந்தக் கோவிலை மீளக்கட்டியேழுப்பும்போது” கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை எவையெவை?

முதலாவதாக அது எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பொதுக்கட்டடமாக இருந்தது என்பது.

இரண்டாவது அது எத்தகைய காலத்தைப் பிரதிபலித்தது என்பது.

மூன்றாவது அது எத்தகைய ஒரு சமூக பண்பாட்டு அரசியல்; பின்னணியை பிரதிபலித்தது என்பது.

நான்காவது அது ஏன் யாரால் இடிக்கப்பட்டது என்பது.

ஐந்தாவது அது எத்தகைய ஒரு காலாட்டத்தில் யாரால் மீளக்கப்பட்டப்படுகிறது என்பது.

முதலில் அது எத்தகைய ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பொதுக்கட்டடமாக இருந்தது என்பது. யாழ்ப்பாணம் ஈழத்தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரங்களில் ஒன்று. அதன் நவீன வரலாற்றில் கட்டியெழுப்பப்பட்ட முதலாவது நிர்வாக மன்றம் அது.  இப்படிப்பார்த்தால் நவீன யாழ்ப்பாணத்தின் சமூக பண்பாட்டு அரசியற் சின்னங்களில் அதுவும் ஒன்று. ஒரு பண்பாட்டுத் தலைநகரமாக யாழ்ப்பாணத்தை நினைவுகூரும் பொழுது ‘ரவுன்கோல்’ என்று அழைக்கப்பட்ட நகர மண்டபமும் நினைவுக்கு வரும். யாழ்நூலகம், யாழ்புகையிரத நிலையம் ஆகிய கட்டடங்களைப் போல ஒரு காலகட்டத்தின் சமூக பொருளாதார அரசியல் வாழ்வின் நினைவுச் சின்னம் அது. ஒரு காலகட்டத்தின் சமூக, பொருளாதார, அரசியல் பண்பாட்டு நிலக்காட்சியின் தவிர்க்கப்பட முடியாத ஓரு தோற்றப்பாடு அது.

இரண்டாவது, அது எத்தகைய ஒரு காலகட்டத்தின் பிரதிநிதி என்பது. அக் கட்டடம் 1931ல் கட்டப்பட்டது. நவீன யாழ்ப்பாணம் முகிழ்ந்தெழுந்து வந்த ஒரு காலகட்டத்தில் அது தனக்கென்று தனித்துவம் மிக்க அடையாளங்களை உருவாக்கிக் கொண்டிருந்த ஒரு கலைச்சூழல் அது. நகரமண்டபத்திலும், நூலகத்திலும் அவற்றின் கூரைகளில்; அமைக்கப்பட்டிருக்கும் கும்மட்டங்கள் (domes) முதற்கொண்டு மேற்சொன்ன கட்டடங்களின் தோற்ற அழகைத் தீர்மானித்த பல அம்சங்களும் இவ்வாறு நவீன யாழ்;பாணமானது தனக்கென்று உருவாக்க முயன்ற கட்டடக்கலை அம்சங்கள் என்று கருதப்படுகின்றன. கோவில் கருவறைகளின் கூரையில் இருக்கும் விமானங்களை ஒத்ததாகவே கும்மட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதும் துறைசார் வல்லுனர்கள் இஸ்லாமியக் கட்டடக்கலை மரபிலும் கும்மட்டங்கள் காணப்படுவதை சுட்டிக்காட்டுகிறார்கள். பழைய கட்டடத்தில் காணப்பட்ட கும்மட்டங்களின் எளிமையும் அமைதியும் உத்தேச வரைபடத்தில் போதிய அளவிற்கு கவனத்திற் கொள்ளப்படவில்லையென்;று  யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு விரிவுரையாளர் சுட்டிக்காட்டினார் இது இரண்டாவது.

மூன்றாவது, நகரமண்டபம் எத்தகைய ஒரு சமூகப்பண்பாட்டு அரசியற் பின்னணியைப் பிரதிபலித்தது என்பது. தமிழ்த்தேசியம் பற்றிய துலக்கமான உரையாடல்கள் நிகழ்ந்திராத ஒரு காலகட்டம் அது.  ஆனால் நவீன யாழ்ப்பாணமானது இலங்கைத்தீவில் ஒரு தனி மையமாக முகிழ்ந்தெழத் தொடங்கிய ஒரு காலகட்டமும் அது.  திருச்சபைக்கும் குறிப்பாக அமெரிக்க மிசன் திருச்சபைக்கும் நாவலர் மற்றும் இந்து போர்ட் இராசரத்தினம் ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்திய தரப்புக்கும் இடையிலான போட்டிகளின் விளைவாக யாழ்ப்பாணத்தின் கல்விநிலை ஏனைய மாவட்டங்களைப் விட பொருந்தா விகிதத்தில் உயரத்தொடங்கியது.  இது நவீன யாழ்ப்பாணத்தின் அடிச்சட்டங்களில் ஒன்று.  இது தவிர நகரமைய சித்தர் பாரம்பரியம் ஒன்று எழுச்சிபெற்று வந்த ஆங்கிலம் தெரிந்த படித்த நடுத்தர வர்க்கத்தின் சிந்தனையிலும், வாழ்க்கை முறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.  இந்திய சுதந்திரப் போராட்டத்தால் யாழ்ப்பாணத்துப் படித்த நடுத்தர வர்க்கம் ஆகர்சிக்கப்பட்டிருந்த ஒரு காலகட்டம் அது.  இலங்கைத்தீவின் முதலாவது இளைஞர் அமைப்பாகிய  யுத் கொங்கிரசை அமெரிக்கன் மிசன் திருச்சபையைச் சேர்ந்த ஹண்டி பேரின்பநாயகம் 1920இல் உருவாக்கியிருந்தார். இவைபோன்ற பல காரணிகளின் விளைவாக உருத்திரண்ட நவீன யாழ்ப்பாணமானது அதன் பலங்கள் பலவீனங்களோடு  இலங்கைத்தீவின் தனித்துவம் மிக ஒரு பிராந்திய மையமாக எழுச்சி பெற்று   வந்த ஓர் அரசியல் சூழல் அது. நகர சபையாக இருந்த யாழ்ப்பாணத்தை கொழும்பிற்கு அடுத்த படியாக மாநகரசபையாக தரமுயர்த்துவதற்கே தமிழ் மக்கள் பெரிய போராட்டங்களை நடாத்த வேண்டியிருந்தது என்பதை ஒரு நண்பர் சுட்டிக்காட்டினார். இது மூன்றாவது.

நான்காவது பழைய நகரமண்டபம் ஏன் இடிக்கப்பட்டது என்பது.  அது போரினால் இடிக்கப்பட்டது.  யாழ் நகரத்துக்கான சமர்களின் சாட்சி அது.  சண்டையிடும் தரப்புக்களுக்கு   மறைப்பாக காப்பரணாக முற்தடுப்பாக இருந்தது.  யாழ்ப்பாணம் துலக்கமான விதங்களில் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் வரக்காரணமாக இருந்த சமர்களில் ஒன்றாகிய யாழ்   பொலிஸ்நிலையத்தின் மீதான தாக்குதலில் நகர மண்டபம் ஒரு மறைப்பாகக் காணப்பட்டது.  இப்படியெல்லாம் போரில் காயப்பட்ட அக்கட்டிடம் முடிவில்  இடித்தழிக்கப்பட்டது.  எனவே  போரினால் இடிக்கப்பட்ட ஒரு கட்டிடத்தை மீளக்கட்டியெழுப்பும் பொழுது  அதன் பழைய ஞாபகங்களை மீட்டுருவாக்கும் விதத்தில் அதன் பழைய அம்சங்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்று மூத்தபிரஜைகள்  சிலர் கருதுகிறார்கள்.  புதிய கட்டிடத்தைப் பார்க்கும் பொழுது அது பழைய காலங்களை  நினைவூட்ட வேண்டும் என்பது அவர்களுடைய எதிர்பார்ப்பு. ஞாபகங்களும், நிலக் காட்சியும் ஒன்று மற்றதிலிருந்து பிரிக்கப்பட முடியாதவை. எனவே ஒரு நிலக்காட்சியை மீளக் கட்டியெழுப்பும் பொழுது அதிலிருந்து பிரிக்கப்பட முடியாத நினைவுகளை பேண வேண்டுமா? இல்லையா?

யாழ் நூலகத்தைப் புனரமைத்த பொழுதும் இவ்வாறான வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன.  எரிந்து இடிந்த அக்கட்டிடத்தை ஒரு போர் நினைவுச்சின்னமாக அல்லது  வாழும் நூதனசாலையாக பேண வேண்டும் என்று ஒரு தரப்பினர் கருத்துத் தெரிவித்தார்கள்.  ஆனால் இறந்த காலத்தின் மீதும்; பட்ட காயங்களின் மீதும், செய்த பாவங்களின் மீதும் வெள்ளையடிக்கப்பட்டு நூலகம் புணரமைக்கப்பட்டது.

இதுபோலவே கிளிநொச்சி நகரில் அமைந்திருக்கும் மத்திய கல்லூரியின் இடிந்த கட்டிடத்தின் எஞ்சிய சிதைந்த சுவரை ஒரு போர் நினைவுச் சின்னமாக பேணவேண்டும் என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது.  ஆனால் அங்கேயும் அந்தச் சுவர் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் எழுப்பப்பட்டுவிட்டது.

போர் நினைவுச் சின்னங்களைப் பேணுவது என்பது ஈழத்தமிழர்கள் தமது வரலாற்றுத் தொடர்ச்சியைப் பேணுவதும் தான். போர் நினைவுச் சின்னங்களை அபிவிருத்தியின் பெயரால் அகற்றி இறந்த காலத்திற்கு வெள்ளையடிக்க முற்படுவது என்பது நிலைமாறுகால நீதிக்கு எதிரானது.  நிலைமாறுகால நீதியின் ஒரு கூறாக உள்ள இழப்பீட்டு நீதிக்குள் இது வருகிறது.  போரால் பாதிக்கப்பட்ட மக்கள் அது தொடர்பான பொது நினைவுச் சின்னங்களை கட்டியெழுப்புவதற்கும் பேணுவதற்கும் உரித்துடையவர்கள் என்று இழப்பீட்டு நீதி கூறுகிறது. இது நாலாவது.

ஐந்தாவது அது யாரால் எப்பொழது மீளக்கட்டப்படுகிறது என்பது.  நகர மண்டபம் எப்படி அமைய வேண்டும் என்பதை தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் சான்றோரும் கருத்துருவாக்கிகளும் படைப்பாளிகளும் தீர்மானிக்கக் கூடிய ஒரு காலகட்டத்தில்தான் இக்கட்டடம் மீளக்கட்டப்படவிருக்கிறது.  நூலகத்தை புனரமைத்தபோது இருந்த ஓர் அரசியற்சூழலோடு ஒப்பிடுகையில்  இது வித்தியாசமானது.  கிளிநொச்சி மத்திய கல்லூரியின் காயப்படட சுவரை இடித்தழித்த பொழுது இருந்ததை விடவும் இப்பொழது நிலைமைகள் பரவாயில்லை.  2009 இற்குப்பின் யாழ்ப்பாணத்திலுள்ள  சாலைகள் புனரமைக்கப்பட்ட பொழுது  இருந்ததைவிடவும் இப்பொழுது நிலைமைகள் பரவாயில்லை. மேற்படி சாலைகள் புனரமைக்கப்பட்டபோது சாலையோரங்களில் காணப்பட்ட மரபுரிமைச் சின்னங்கள் முன்யோசனையின்றி அழிக்கப்பட்டன. இது தொடர்பில் பா.அகிலன் உதயன் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு “காலத்தின் விளிம்பு” என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டன.

மேற்சொன்ன ஊதாரணங்களோடு மற்றொரு குரூரமான உதாரணத்தையும் இங்கு காட்டலாம். யாழ் கச்சேரிக்கு அருகே இருக்கும் பழைய பூங்கா எப்படி சிதைக்கப்பட்டது என்பதே அது. கொலனித்தவ காலத்தின் சிதைந்த கட்டுமான எச்சங்களோடு காணப்படும் பழைய பூங்காவின் ஒரு பகுதி நவீன பூங்காவாக மாற்றப்பட்டுவிட்டது. அங்கே ஹைபிறிற் மரங்களும் சிற்பங்களும் வைக்கப்பட்டு ஒரு நவீன பூங்கா உருவாக்கப்பட்டிருக்கிறது.  ஏனைய பகுதிகளில் காணப்பட்ட முதிய பெருமரங்கள் தறித்து வீழ்த்தப்பட்டு புதிய நிர்வாக மையங்கள் கட்டியெழுப்பப்பட்டுள்ளன.  யாழ் மாநகரசபை எல்லைக்குள் காணப்பட்ட அழகிய சிறிய முது காடே பழைய பூங்கா.  அது சிதைக்கப்பட்ட போது அது ஒரு மரபுரிமைச் சின்னம் என்ற அடிப்படையிலோ அல்லது சூழலியல் நோக்கு நிலையிலிருந்தோ முடிவெடுக்கப்டவில்லை.     அபிவிருத்தி எனப்படுவது ஒரு மக்கள் கூட்டத்தின் பண்பாட்டு உரிமைகளோடும் தொடர்புடையது என்ற தொனிப்பட அமர்தியா சென் கூறியிருக்கிறார். பழைய பூங்கா சிதைக்கப்பட்ட போதிருந்த அரசியற் சூழலோடு ஒப்பிடுகையில் இப்பொழுது நிலமை பறவாயில்லை.

இப்பொழுது பண்பாட்டுரிமைகளும் உட்பட அரசியல் உரிமைகள் தொடர்பில் அதிகம் விவாதிக்கப்படுகிறது.  நிலைமாறுகால நீதியின் ஒரு பகுதியாக இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்து அதை புதிய யாப்புக்குள் இணைப்பது என்ற ஒரு பொறுப்பை அரசாங்கம் ஜெனீவாவில் ஒப்புக்கொண்டிருக்கிறது.  இதில் அரசாங்கம் விசுவாசமாக நடக்குமோ இல்லையோ  இது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் நடந்து வருகின்றன. தமிழ்மக்களுக்குரிய தீர்வு எனப்படுவது அவர்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிப்பதிலிருந்தே தொடங்குகிறது.  ஒரு தேசிய இனத்தின் இருப்பிலிருந்து பிரித்தெடுக்கப்பட முடியாத  அதன் கூட்டுரிமைகளில் ஒன்றுதான் பண்பாட்டுரிமையும்.  தமது பண்பாட்டின் தொடர்ச்சியறாத் தன்மையை பேணவும் பாதுகாக்கவும் தமிழ் மக்கள்; உரித்துடையவர்கள். எனவே மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்பதென்பது எல்லாவிதத்திலும் அரசியல் உரிமைகளின் பாற்பட்டதுதான்.  தமது வரலாற்றுத் தொடர்ச்சியை பாதுகாக்க வேண்டும் என்பதும் அரசியல் உரிமைதான். தமது தேசிய இருப்பை பேணிப்பாதுகாக்க முற்படும் தமிழ்மக்கள் தமது வரலாற்றுத் தொடர்ச்சியையும் மரபுரிமைச் சின்னங்களையும் பாதுகாக்கத் தேவையான கூட்டுரிமைகளை பெறுவதற்காக போராடவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

கிழக்கு ஐரோப்பாவில் போரினால் சிதைந்த பொஸ்னியாவிலும் ஹேர்சகோவினாவிலும் கட்டடக்கலையானது எப்படி போரின் ஒரு பகுதியாக இருந்தது என்பதை அன்ட்ரூ ஹேர்ச்சர் தனது “பொஸ்னியாவை நினைவு கூரலும் மீளக் கட்டியெழுப்பலும்” என்ற ஆய்வில் சுட்டிக் காட்டியுள்ளார். “கட்டடக்கலையானது நிலத்தின் மீதான வரலாற்று ரீதியிலான உரித்துடமையின் மிகத் துலக்கமான குறியீடாக போரிடும் தரப்புக்களால் பார்க்கப்பட்டது”. என்று அவர் கூறுகின்றார்.

ஈழப் போரிலும் வெற்றி பெற்ற தரப்பு தோல்வியுற்ற தரப்பின் கட்டுமானங்களைச் சிதைப்பதும் நினைவுகளை அழிப்பதும் தனது தரப்பு நினைவுச் சின்னங்களை மட்டும் தெரிந்தெடுத்துப் பேணுவதும் இன்று வரை நடைமுறையில் உள்ளது.

ஆனால் இப்படியொரு காலகட்டத்தைத்தான் ஐ.நா நிலைமாறு காலம் என்று கூறுகின்றது. நிலைமாறு கால நீதிச் செய்முறைகளில் மக்கள் கருத்தறிதல் எனப்படுவது ஒரு முக்கிய கூறாகும். யாப்புருவாக்க செயற்பாடுகளிலும் நல்லிணக்க செய்முறைகளின் போதும் இவ்வாறு பொது மக்களின் கருத்துக்கள் அறியப்பட்டன. இவ்வாறு பொது மக்களின் கருத்தை அறிவது என்பது கிட்டத்தட்ட ஒரு சடங்காக செய்யப்படும் அரசியற் சூழலில் யாழ் நகர மண்டபத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும் பொது மக்களின் அபிப்பிராயங்கள் கேட்கப்பட்டுள்ளன. நிலைமாறுகால நீதிச் சூழலுக்குள் தான் இவ்வாறு கேட்கப்பட வேண்டும் என்பதல்ல. கட்டடக்கலையின் நவீன விதிகளில் ஒன்றாகிய இட உருவாக்க கோட்பாட்டின்படியும் (place making theory)  பொது இடங்களை வடிவமைக்கும் பொழுது பொது மக்களின் பங்களிப்பைப் பெற வேண்டும் என்று கூறப்படுகின்றது.

ஒரு பொதுக்கட்டடம் எனப்படுவது பொதுப் பாவனைக்குரியது. அது சமூகத்தின் பொது உளவியலை பிரதிபலிப்பதாக கூட்டு மனத்தைப் பிரதிபலிப்பதாக உருவாக்கப்பட வேண்டும். நிலக்காட்சியும் ஞாபகங்களும் பிரிக்கப்பட முடியாதவை. எனவே ஒரு பொதுக்கட்டடத்தை அமைக்கும் பொழுது அது தனது சுற்றுச் சூழலோடு இசைந்தால் மட்டும் போதாது. அது அமைந்திருக்கும் நிலக்காட்சியோடும் இசைந்து போக வேண்டும். நிலக் காட்சியிலிருந்து நினைவுகளைப் பிரிக்க முடியாது. எனவே பழைய நினைவுகளோடும் இசைந்து போக வேண்டும். அந்த சமூகத்தின் சமூகப் பொருளாதார பண்பாட்டு அரசியல் அம்சங்களோடும் இசைந்து போக வேண்டும். கலாநிதி ரஞ்சித் தயாரட்ண எழுதியWARHITECTURE AND URBICIDE: OAFISH INTERVENTIONS IN ARCHITECTURE என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது போல “சமூக முரண்பாடுகளின் மத்தியில் கட்டடக் கலையானது தன்னை ஓர் அப்பாவிக் கலையாக பிரகடனப்படுத்தி விட முடியாது”.

31.03.2017

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *