தேர்தல் ஆண்டில் தையிட்டி விகாரை 

அரசியல் சமூகச் செயற்பாட்டாளரான செல்வின் அண்மையில் சொன்னார், பலாலியில் தரையிறங்கும் ஒரு விமானத்தின் பருந்துப் பார்வையில் முதலில் தெரியப் போவது தையிட்டி விகாரைதான். பகலில் சூரிய ஒளியிலும் இரவில் இருளின் பின்னணியில் மின்னொளியில் முழிப்பாகத் தெரியப்போவதும்  விகாரையாகத்தான் இருக்கும்.எனவே பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கும் ஒரு விமானப் பயணிக்கு யாழ்ப்பாணத்தின் தரை தோற்றத்தில் முதலில் முழிப்பாகத் தெரியபோவது தையிட்டித்  தாதுகோபமா ?

தையிட்டியிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாதகல் சம்பில் துறை ஏற்கனவே ஜம்புகோளப் பட்டினமாக பெயர் மாற்றப்பட்டு சிங்கள பவுத்த மயப்படுத்தப்பட்டு விட்டது.அங்கே ஒரு பெரிய விருந்தினர் விடுதி உண்டு. அது யுத்த வெற்றிவாதத்தின் சுற்றுலாவிகளாக வரும் சிங்கள பௌத்த பயணிகளைக் கவரும் நோக்கிலானது.அதையும் படைத்தரப்பே பரிபாலித்து வருகிறது.அங்கேயும் தனியார் காணிகள் பறிக்கப்பட்டிருப்பதாக குற்றச் சாட்டுக்கள் உண்டு. இப்படிப்பட்டதோர் நிலப்பறிப்பு மற்றும் சிங்கள பௌத்த மயமாக்கற் பின்னணியில் தையிட்டி விகாரையை விட்டுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்குமா ?

அண்மையில் உயிர் நீத்த ஊடகவியலாளராகிய பாரதியின் இறுதி நிகழ்வுக்கு வந்திருந்த கொழும்பை மையமாகக் கொண்ட ஊடகவியலாளர் ஒருவர் என்னிடம் பின்வருமாறு சொன்னார்,”தையிட்டி விகாரையின் மையப் பகுதி அதாவது தாதுகோபம் அமைந்திருக்கும் காணி ஒரு மலேசிய ஓய்வூதியருக்குரியது, அவருடைய உறவினராகிய ஒரு பெண் மலேசியாவில் வசிக்கிறார்,அவர் சில ஆண்டுகளுக்கு முன் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொழுது அவரைச் சந்தித்து அது தொடர்பாக உரையாடியிருக்கிறார்.அதன் பின் அவர் அப்போதிருந்த தளபதி சவேந்திர சில்வாவையும் சந்தித்ததாகத் தகவல் உண்டு” என்று.

இந்த விடயத்தை நான்,அண்மையில் யாழ்.திண்ணை விடுதியில் நடந்த ஐநாவின் விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட சுமந்திரனைக் கண்ட பொழுது கேட்டேன்.அவர் அத்தகவல்கள் உண்மையானவை என்று சொன்னார்.அந்தப் பெண் கிட்டத்தட்ட 80 வயதைக் கடந்தவர் என்று கூறப்படுகிறது.அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார் அல்லது அவர் இருக்கிறாரா இல்லையா போன்ற விவரங்கள் சுமந்திரனுக்குத் தெரியவில்லை.

ஆனால்,காணி உரிமையாளர் வெளிநாட்டில் என்பது உண்மையான தகவல் அல்ல என்று சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் சசீவன் கூறுகிறார்.அப்போதிருந்த தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தலைவர் இது தொடர்பில் பொறுப்பாக நடந்து கொள்ளவில்லை என்றும், விகாரை கட்டப்பட்டதற்கு அவரும் பொறுப்பு என்று சசீவன் குற்றஞ்  சாட்டுகிறார்.

காணி உரிமையாளர் மலேசியாவில் என்று கூறப்படுவதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வட்டாரங்கள் வேறுவிதமாகப் பார்க்கின்றன. தையிட்டிப் போராட்டத்தின் எழுச்சியை திசைதிருப்பும் நோக்கத்தைக் கொண்ட தகவல்கள் இவை என்று அவர்கள் கருதக்கூடும். அவர்கள் தையிட்டி விகாரையை ஒரு சட்டவிரோத கட்டுமானம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால் அதை சட்டரீதியாக மட்டும் அணுகக்கூடாது. அதை ஏன் தனிய சட்ட ரீதியாக மட்டும் அணுகக்கூடாது? ஏனென்றால் சட்டவிரோதமானது பிழையானது என்றால் சட்ட ரீதியானது சரியானது என்பதே தர்க்கம். சட்ட ரீதியானது சரியானது என்றால் சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பின் சட்டக் கட்டமைப்பு தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தரும் என்று நம்பலாமா?

இல்லை. தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பின் கருவிகளில் சட்டமும் ஒன்று. அண்மையில் அரசியல் பேசும் இளையோர் என்ற அமைப்பின் மெய்நிகர் சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டதுபோல,திருகோணமலையில் பஸ் நிலையத்தில் கட்டப்பட்ட இரண்டு புத்தர் சிலைகளுக்கு  எதிராக நீதிமன்றம் வழங்கிய கட்டளை உண்டு.அனால் சிலைகள் அகற்றப்படவில்லை.கிழக்கில் மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக நீதிமன்றக் கட்டளை உண்டு.முல்லைத்தீவில், நீராவியடியில்,நீதிமன்றத் கட்டளையை மீறி பிள்ளையார் ஆலய வளாகத்தில்  ஒரு பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டது.அதுபோல பல இடங்களில் நீதிமன்றக் கட்டளைகளை மீறி சிங்கள பௌத்த மயமாக்கலும் நில ஆக்கிரமிப்பும் நடந்திருக்கிறது.நடந்து கொண்டிருக்கிறது.எனவே இலங்கைத்தீவின் சட்டக் கட்டமைப்பு தமிழ் மக்களுக்கு நீதியைத் தரும் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முடியாது.

மாறாக தையிட்டி விகாரை விடயத்தை நிலப்பறிப்பு,சிங்கள பௌத்த மயமாக்கல் இந்த நிகழ்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும்; அணுக வேண்டும்; அதற்கு எதிராகப் போராட வேண்டும்.

கடந்த பௌர்ணமி நாளன்று நடந்த போராட்டம் குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒவ்வொரு பௌர்ணமி நாளில் மட்டும் போராட்டலாமென்றால் அது மிகப் பலவீனமானது.ஏனென்றால் நிலப்பறிப்பும் சிங்கள பௌத்த மயமாக்கலும் பௌர்ணமிகளுக்காக காத்திருப்பதில்லை.அவை மிகவும் நிறுவனமயப்பட்ட நடவடிக்கைகள்.இக்கட்டுரை எழுதப்படுகையில்கூட எங்காவது ஒரு சிறு குன்றில் ஏதாவது ஒரு விகாரைக்கு ஒரு செங்கல் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும்.

எனவே ஒவ்வொரு போயா தினத்தன்றும் போராடி தையிட்டியை மீட்க முடியாது. நில அபகரிப்புக்கும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கும் எதிரான போராட்டம் மாதத்தில் ஒரு தடவை மட்டும் நடத்தப்படும் ஒன்றாக இருக்க முடியாது. ஏனென்றால் நில அபகரிப்பும் சிங்கள பௌத்த மயமாக்கலும் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் தொடர் நடவடிக்கைகள்.பல தசாப்தகால தொடர்ச்சியான நடவடிக்கைகள்.மிகவும் நிறுவனமயப்பட்ட, அதிக வளம் பொருந்திய அரசு உபகரணங்களால் முன்னெடுக்கப்படுகின்ற தொடர்ச்சியான நடவடிக்கைகள்.

அதாவது சிங்கள பௌத்த மயமாக்கல் நடவடிக்கைகள்-அதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால்-தமிழ் மக்களின் தேசிய இருப்பை அழிக்கும் நடவடிக்கைகள் கடந்த பல தசாப்தங்களாக தொடர்ச்சியாக முன் னெடுக்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக 2009க்குப் பின்னரும் அது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.ஆனால் தமிழ் எதிர்ப்புத்தான் குறைந்து போய்விட்டது.

இப்படிப்பட்டதோர் பின்னணியில் நில அபகரிப்புக்கும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கும் எதிராகத் தொடர்ச்சியாகப் போராட வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் தமிழ்த் தரப்புக்கு உண்டு.அடுத்த பௌர்ணமிவரை இன்னுமொரு எழுச்சிக்காகக் காத்திருப்பது பலமானது அல்ல.

தமிழ் மக்களுடைய போராட்டத்தின் அளவுதான் இந்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முடிவையும் தீர்மானிக்கும். ஏனென்றால் இது ஒரு தேர்தல் ஆண்டு. இந்த ஆண்டில் சிங்கள பௌத்த வாக்காளர்களின் வாக்குகளைக் கவர்வதா? அல்லது தமிழ் மக்களுடைய பயங்களை நீக்குவதா? என்று பார்த்தால், அரசாங்கம் சிங்கள பௌத்த வாக்காளர்களின் கூட்டு உணர்வை பாதுகாக்கவே முன் நிற்கும்.

தையிட்டிப் போராட்டத்தின் பின்னணியில் அரசுத் தலைவர் வல்வெட்டித் துறைக்கு வருகிறார். பிரதமர் வலிகாமத்தின் பல பகுதிகளுக்கும் வருகிறார். மானிப்பாயில் வைத்து பிரதமர் கூறுகிறார், இது தமிழ் மக்களாலும் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் என்று.

அதேசமயம் அமைச்சர் சந்திரசேகரன் மீனவக் கிராமங்கள் தோறும் தீயாக வேலை செய்கிறார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த விடயத்தில் ஒருவித இந்திய எதிர்ப்பை லோக்கலாக வெளிப்படுத்துகின்றது. இந்திய மீனவர்களுக்கு எதிராகத் திட்டவட்டமான நிலைப்பாட்டை எடுப்பதன்மூலம் தமிழ் கடல் தொழிலாளர் சங்கங்களைக் கவர்வது அவர்களுடைய உள்நோக்கம்.

அண்மையில் வெளியிடப்பட்ட வரவு செலவுத் திட்ட அறிக்கையும் தமிழ் மக்களைக் கவரும் நோக்கிலானது. ரணில் விக்கிரமசிங்க எரித்த நூலகத்தை நாங்கள் அபிவிருத்தி செய்கிறோம் என்ற பொருள்பட சந்திரசேகரன் முகநூலில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். நூலக எரிப்புக்கு ரணில் எப்பொழுதோ மன்னிப்புக் கேட்டு விட்டார்.ஆனால் வடக்குக் கிழக்கை பிரித்தமைக்கு; சுனாமிப் பொதுக்கட்டமைப்பு எனப்படும் மனிதநேயக் கட்டமைப்பை எதிர்த்தமைக்கு; இறுதிக்கட்டப் போரில் மகிந்தவைப் பலப்படுத்தியதற்கு  ஜேவிபி இன்றுவரை மன்னிப்புக் கேட்கவே இல்லை.நூலகத்துக்கு நிதி ஒதுக்கியதன்மூலம் படித்த தமிழ் நடுத்தர வர்க்கத்தைக் தவறலாமா என்று அரசாங்கம் முயற்சிக்கின்றது.

அதாவது விரைவில் வரக்கூடிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்,பின்னர் வரக்கூடிய மாகாண சபைத் தேர்தல் ஆகியவற்றை இலக்கு வைத்துத் தமிழ் வாக்குகளைக் கவரும் நோக்கத்தோடு அரசாங்கம் தமிழ்ப் பகுதிகளில் இறங்கி வேலை செய்கின்றது.

ஆனால் பிரதமர் ஹரிணி கூறுவது போல இந்த அரசாங்கம் தமிழ் மக்களாலும் தெரிவு செய்யப்பட்டது என்றால்,தையிட்டி விகாரை விடயத்தில் தமிழ் மக்களின் பயத்தையா அல்லது சிங்களபௌத்த கூட்டு உளவியலையா அதிகமாக மதிக்கும்?

வரவுசெலவுத் திட்ட அறிக்கையை முன்வைத்து உரையாற்றிய அனுர  பின்வருமாறு கூறுகிறார்…”எங்களில் யாரும் லஞ்சம் எடுப்பதில்லை. அப்படி எடுத்தால் அவர்களுக்கு எந்த மன்னிப்பும் கிடையாது. ஊழல் இல்லாத ஆட்சியை உருவாக்குவேன்.லஞ்சம் வாங்கப் பயப்படும் நாட்டை உருவாக்குவேன்.அப்படிப்பட்ட ஆட்சியால் மட்டும்தான் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும்.”

அவர் கூறுவது சிங்கள மக்களுக்குப் பொருந்தலாம். ஆனால் தமிழ் மக்களுக்குப் பொருந்தாது.தமிழ் மக்கள் ஊழலுக்கு எதிராகவோ அரசு நிர்வாக துஷ்பிரயோகங்களுக்கு எதிராகவோ போராடவில்லை. நமது தேசிய இருப்பை அழிக்க முற்படும் இன ஒடுக்குமுறைக்கு எதிராகத்தான் போராடி வருகிறார்கள். எனவே தமிழ் மக்கள் கேட்பது தமது தேசிய இருப்பைப் பாதுகாக்க வேண்டும் என்றுதான்.

ஊழலற்ற ஆட்சியால்தான் நாட்டைக் கட்டியெழுப்பலாம் என்று கூறுவது தவறு. இனவாதமற்ற,இன அழிப்புக்கு பரிகாரம் தரத் தயாராக உள்ள,அதாவது, இனப் பிரச்சினையைத் தீர்க்கத் தேவையான அரசியல் திடசித்தத்தை- “பொலிட்டிக்கல் வில்லைக்”-கொண்டிருக்கும் ஒரு அரசாங்கத்தால்  மட்டுந்தான் இச்சிறிய தீவைக் கட்டியெழுப்ப முடியும்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *