குளப்பிட்டிச் சம்பவம்: மீள நிகழாமையின் மீது தீர்க்கப்பட்ட வேட்டுக்கள்

jaffna-accident-e1477063512541

குளப்பிட்டிச் சந்திப் படுகொலைகளை வெறுமனே குற்றச்செயல்கள் என்றோ அல்லது தவறு என்றோ கூறிவிட்;டுக் கடந்து போய்விட முடியாது. தமது உத்தரவை மீறி தப்பிச்சென்ற இரண்டு நபர்களை நோக்கிச் சுடுவது என்று எடுக்கப்பட்ட முடிவு வெற்றிடத்திலிருந்து வந்த ஒன்றல்ல. வானத்துக்கும் தரையில் மோட்டார்சைக்கிளில் சென்றவர்களுக்கிடையில் வித்தியாசம் தெரியாத மனோநிலையும் வெற்றிடத்திலிருந்து வந்ததல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இலங்கைத் தீவில் சுமார் மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக நிலவி வந்த மிகக் குரூரமான ஒரு பாரம்பரியத்திலிருந்து உற்பத்தியாகிய ஒரு மனோநிலை அது. கடைசிக் கட்டப் போரில் நீரிலிருந்து மீனை வடித்தெடுப்பதற்காக கடலை இரத்தமாக்கிய ஒரு மனோ நிலையே அது.
எனவே அந்த மனோ நிலையிலிருந்து தீர்க்கப்பட்ட வேட்டுகள் அரசியல் வேட்டுக்கள் தான்.

பொலிசார் அதைத் திட்டமிட்டுச் செய்தார்களா? என்பதை நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் தமது உத்தரவை மீறிச் சென்ற இருவரை நோக்கிச் சுடலாம் என்ற துணிச்சல் மேற்படி மனோநிலையின் பாற்பட்டதுதான். இதே போல ஒரு நிலமை தென்னிலங்கையில் ஏற்பட்டிருந்தால் இப்படி அசட்டையாகச் சுட்டிருப்பார்களா? சுடப்படுவது தமிழ் உயிர் என்றால் அது பொருட்டில்லை என்று முன்பு நிலவிய ஒரு பாரம்பரியத்தின் தொடர்ச்சியா இது?
முகநூலில் இச்சம்பவம் தொடர்பில் ஒரு பெண் படைப்பாளி கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதையை மீளப் பிரசுரித்திருந்தார். ‘மான் சுட்டால், அன்றி மரை சுட்டால் மயில் சுட்டால் ஏன் என்று கேட்க இந்த நாட்டில் சட்டம் உண்டு……… மனித உயிர் மட்டும் மலிவு… மிக மலிவு’ என்று அந்த கவிதையில் வருவது போன்ற ஒரு நிலமையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நாட்டில் நிலவியது. தமிழர்களைச் சுடலாம், கைது செய்யலாம், எங்கே வைத்தும் சோதிக்கலாம், சித்திரவதை செய்யலாம், 18 மாதங்கள் தடுத்து வைத்து விசாரிக்கலாம், ஒரு வழக்கில் குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்ட மறுகணமே மற்றொரு வழக்கில் பிடித்து உள்ளே போடலாம். ஒருவரை பிடிப்பதற்காக எப்படிப்பட்ட வழக்கையும் சோடிக்கலாம் அல்லது வழக்கே தேவையில்லை. வெள்ளை வானில் தூக்கிக் கொண்டு போகலாம்………என்று இவ்வாறாக நிலவி வந்த ஒரு குரூரமான பாரம்பரியத்தின் பின்ணியில் வைத்தே ஒரு சராசரித் தமிழ் மனம் குளப்பிட்டிச் சம்பவத்தைப் பார்க்கும்.

hartal-1
அந்த மாணவர்கள் போதையில் இருந்தார்களா? இல்லையா என்பது இரண்டாம் பட்சமான கேள்வி. அவர்கள் ஏன் அந்த நேரம் வீதியால் போனார்கள் என்பதும் இரண்டாம் பட்சமான கேள்வி. தடுத்து நிறுத்தப்பட்ட போதும் அவர்கள் ஏன் ஓடினார்கள் என்பதும் இரண்டாம் பட்சமான கேள்வி. ஆனால் அப்படி ஓடினால் அவர்களைச் சுடலமா? என்பதே இங்கு முதலும் முக்கியமானதுமாகிய கேள்வி

.
ஆட்சி மாற்றத்தின் பின்னரான நிலமைகளின் அடிப்படையில் குளப்பிட்டிச் சம்பவத்தை இனரீதியாகப் பார்க்கக் கூடாது என்று கூறுவோர் தெற்கில் மட்டுமல்ல வடக்கிலும் இருக்கிறார்கள். கடந்த 22 மாதகால அனுபவங்களின் பின்னணியில் குளப்பிட்டிச் சம்பவத்தை ஓர் அரசியல் விவகாரம் ஆக்கக்கூடாது என்றும் அவர்கள் கேட்கிறார்கள். அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த மோதல்களை மாணவக் குழுக்களுக்கிடையிலான மோதலாகக் காட்டுவோரும் இவர்கள் மத்தியில் உண்டு. இப்பொழுது யுத்தம் இல்லை. புலிகள் இல்லை, மகிந்த ஆட்சியில் இல்லை, எனவே ஒரு பிரச்சினையுமில்லை என்று இவர்கள் கருதுவதாக தெரிகிறது.
யுத்தமும் சரி மகிந்தவும் சரி புலிகள் இயக்கமும் சரி விளைவுகள்தான். தமிழ் தேசியம் எனப்படுவதே சிங்கள பௌத்த மேலாதிக்கவாதம் தோற்றுவித்த ஒரு குழந்தை தான். அந்த சிங்கள பௌத்த மேலாதிக்க மனோநிலைதான் மூலகாரணம். அந்த மனோநிலையின் உச்சக்கட்ட வளர்ச்சியே போரில் புலிகள் இயக்கத்தைத் தோற்கடித்தது. அதில் இழைக்கப்பட்ட குற்றங்களை மூடி மறைக்கப் பார்ப்பதும் அந்த மனோ நிலைதான். இப்பொழுது யாப்புருவாக்கத்தில் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று உறுதி கூறுவதும் ஒற்றையாட்சியை பாதுகாப்பதும் அதே மனோநிலைதான். எனவே குளப்பிட்டிச் சம்பவத்தை இந்த வரலாற்றுப் பின்னணியில் வைத்தே விளங்கிக் கொள்ள வேண்டும். அச் சம்பவத்தை அதன் அரசியலை நீக்கிப் பார்க்க முடியாது.
ஆட்சி மாற்றம் நிகழ்ந்து 22 மாதங்களாகி விட்டன. நல்லாட்சி என்று புகழப்படும் மைத்திரி – ரணில் ஆட்சியில் இப்பொழுதும் யாழ்ப்பாணத்;தில் இருந்து கொழும்பிற்கு மினிவானில் போகும் பயணிகள் ஒன்றை அவதானிக்கலாம். வானை மறிக்கும் பெரும்பாலான பொலிஸ் அணிகளுக்கு சாரதிகள் கையூட்டு கொடுக்கிறார்கள். இதில் மிக அரிதான புறநடைகளே உண்டு. சாரதிகளில் தவறு இருக்கிறதோ இல்லையோ அந்த இடத்தில் அந்த நேரத்தில் சட்டப்படியான உரிமைகளைப் பற்றி விவாதிப்பதற்கு சாரதிகள் தயாரில்லை. குற்றச் சாட்டுப் பதியப்பட்டு சாரதியின் ஆவணங்கள் கையகப்படுத்தப்பட்டால் அவற்றை மீளப் பெறுவதற்கு ஏறக்குறைய ஒரு முழுநாளைச் செலவழிக்க வேண்டியிருக்கும் என்று அவர்கள் கூறுகின்றார்கள். அந்த ஆவணங்களை மீளப் பெறுவதற்காக ஏதோ ஒரு சிங்களப் பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு நீண்ட தூரம் பயணம் செய்து, நீண்ட நேரம் மினக்கெட்டு தண்டப்பணம் செலுத்தி ஆவணங்களைப் பெற வேண்டும். இப்படி மினக்கெட்டாலும் நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் பலமாகக் காணப்படுகின்றது. எனவே தேவையற்ற தாமதங்களையும், செலவையும் தவிர்ப்பதற்கு சாரதிகள் மறிக்கப்பட்ட உடனேயே லஞ்சம் கொடுக்கத் தயாராகி விடுகிறார்கள். இது விடயத்தில் சாரதிகளே லஞ்சத்தை ஊக்குவிப்பதாக ஓர் அவதானிப்பு உண்டு.

sri_lanka_f_1130_-_attacchi_nel_nord
ஆனால் தேவையற்ற தாமதம், நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் போன்றவற்றின் பின்னணியில் பிரச்சினையை உடனேயே வெட்டி விடத்தான் சராசரித் தமிழ் மனம் விரும்புகிறது. ஆட்சி மாற்றத்தின் பின்னரான கடந்த 22 மாதங்களிலும் இந்த நடைமுறைகளில் திருப்பகரமான மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை.ஆனால் கொழும்பிலிருந்து கண்டிக்குப் போகும் வாகனங்களுக்கு இந்தளவுக்குச் சோதனைகள் கிடையாது என்று ஒரு ஒப்பீடு உண்டு.
இப்படித்தான் உரிய அனுமதியோடும் ஆவணங்களோடும் மரக்குற்றிகளை, அல்லது மரத்துண்டுகளை அல்லது கல்லை மணலை ஏற்றிக் கொண்டு வரும் வாகனங்களும் அவற்றை இடையில் மறிக்கும் பொலீஸ்காரர்களுக்கு கையூட்டுக் கொடுக்க வேண்டும் என்பது ஓர் எழுதப்படாத சட்டமாகப் பின்பற்றப்பட்டு வருவதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. சட்டப்படி போராடி நீதி கிடைக்குமோ இல்லையோ அதற்கென்று செலவழிக்கும் பணம், நேரம் என்பவற்றைக் கூட்டிக் கழித்துப் பார்த்து அதைவிட லஞ்சத்தைக் கொடுப்பதன் மூலம் பிரச்சினையை உடனடியாக வெட்டி விடுவதே சமயோசிதம் என்று தமிழ்ச் சாரதிகளும் வாகன உரிமையாளர்களும் நம்புகிறார்கள். சட்ட நடவடிக்கைகளில் காணப்படும் கால தாமதம்;; கூட இனரீதியிலானது என்ற ஒரு நம்பிக்கை ஆழப்பதிந்து விட்டது.
இப்படியாக ஸ்ரீலங்காப் பொலிஸ் கட்டமைப்பு, நீதி பரிபாலனக் கட்டமைப்பு போன்றவை தொடர்பில் மிகக் கசப்பான முன் அனுபவங்களோடும், மாறா முற்கம்பிதங்களோடும் தமிழ் மக்கள் காணப்படுகிறார்கள். ஆட்சி மாற்றத்தின் பின்னரான கடந்த 22 மாத காலம் மேற்படி முற்கம்பிதங்களையும், அச்சங்களையும் அகற்றத் தவறிவிட்டது. குளப்பிட்டிச் சம்பவம் மேற்படி முற்கற்பிதங்களை மீளப் பலப்படுத்தியிருக்கிறது.
அரசியல் யாப்பில் உள்ள ஒற்றையாட்சியைப் பாதுகாக்கும் வாசகங்களையும், சிங்கள பௌத்தத்திற்கு முதன்மை வழங்கும் வாசகங்களையும் நீக்கப் போவதில்லை என்று ரணில் – மைத்திரி அரசாங்கம் அடிக்கடி கூறி வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 12ஆம் திகதி கொழும்பில் இலங்கை மன்றக் கல்லூரியில் ஆற்றிய உரையில் மைத்திரி என்ன சொல்லியிருக்கிறார்? போரை வெற்றி கொண்ட படைப் பிரதானிகளை விசாரணை என்ற பெயரில் அவமதிக்கக் கூடாது என்ற தொனிப்பட எச்சரித்துள்ளனர். படைப் புலனாய்வு அதிகாரிகள் சிலர் விசாரணை என்ற பெயரில் பல மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை அவர் விமர்சித்துமுள்ளார். அதாவது யுத்த வெற்றி நாயகர்களை அவர் பாதுகாக்க முற்படுகிறார். ஆனால் பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் அவர் அவ்வாறு சினந்து பேசியதேயில்லை.
யுத்த வெற்றி நாயகர்களைப் பாதுகாப்பது என்பதும் ஒற்றையாட்சியைப் பாதுகாப்பது என்பதும் சிங்கள பௌத்த மேலாதிக்க மனோநிலையைப் பாதுகாப்பதுதான். எனவே அந்த மனோநிலையைப் பாதுகாக்கும் ஓர் அரசாங்கமானது அந்த மனோநிலையோடு சுடப்பட்ட வேட்டுக்களால் கொல்லப்பட்ட மாணவர்களின் விடயத்தில் நீதியை நிலைநாட்டுமா?
ஆனால் மேற்கு நாடுகளும் ஐ.நாவும் கூறுகின்றன இலங்கை அரசாங்கம் நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகளில் முன்னேறி வருவதாக. நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளுக்குரிய நான்கு பெருந்தூண்கள் என்று வர்ணிக்கப்படுபவற்றுள் ஒன்று ‘மீள நிகழாமை’ ஆகும். அதாவது எவையெல்லாம் மீள நிகழ்வதால் ஒரு நாட்டில் பிரச்சினைகள் திரும்பத் திரும்ப ஏற்படுகின்றனவோ, அவை மீள நிகழ்வதைத் தடுப்பது என்று பொருள். இப்படிப் பார்த்தால் இலங்கைத் தீவின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூல காரணமாகக் காணப்படும் சிங்கள பௌத்த மேலாதிக்க மனோநிலையை மீள எழாதபடி தடுக்க வேண்டும். ஆனால் ரணில் – மைத்திரி அரசாங்கம் அந்த மனோநிலையை நீக்க முற்படவில்லை. மாறாக அதைப் பாதுகாக்கவே முற்படுகின்றது. இவ்வாறு பொத்திப் பொத்திப் பாதுகாக்கப்படும் ஒரு மனோநிலையின் கையிலிருக்கும் துப்பாக்கி தமிழ் உயிர்களை எப்படிப் பார்க்கும்? குளப்பிட்டிச்சந்தியில் குறிவைக்கப்பட்டது இரண்டு தமிழ் மாணவர்கள் மட்டுமல்ல நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளுக்குரிய நான்கு பெருந்தூண்களில் ஒன்றாகிய மீள நிகழாமையுந்தான்.
எனவே குளப்பிட்டிச் சந்திப் படுகொலைகளுக்காக அரசாங்கம் மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது. அல்லது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ;டஈடு வழங்கினால் மட்டும் போதாது. அல்லது சம்பந்தப்பட்ட பொலிசாருக்கு தண்டனை வழங்கினால் மட்டும் போதாது. இவற்றுக்கும் அப்பால் போக வேண்டும். இந்தப் பிரச்சினைக்குக் காரணமான சிங்கள பௌத்த மேலாதிக்க மனோநிலையை பாதுகாக்கும் ஏற்பாடுகள் எவையும் புதிய யாப்பில் இணைக்கப்பட மாட்டா என்ற நம்பிக்கையை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்;. புதிய யாப்பில் இணைக்கப்படவிருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வில் தமிழ் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் பொருத்தமான திருப்தியான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். மாறாக புதிய யாப்பும் முன்னைய யாப்புக்களைப் போல சிங்கள பௌத்த மேலாதிக்க மனோநிலையின் சட்டப் பிரதிபலிப்பாகக் காணப்படுமாயிருந்தால் குளப்பிட்டிச்சந்தியில் இடம்பெற்றதைப் போன்ற படுகொலைகளைகளுக்கான வாய்ப்புக்கள் தொடர்ந்தும் இருக்கும். அக்கொலைகளை அரசியல் நீக்கம் செய்யும் அரசியலும் தொடர்ந்தும் இருக்கும்.
கடந்த 27ம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்த கருத்துக்களை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். யாழ்ப்பாணத்தில் பொலிசார் நடந்து கொண்ட விதம் முற்றிலும் தவறானது என்பதை ஒப்புக்கொண்ட அவர் தற்போதைய நிலமைகளின் அடிப்படையில் பாதுகாப்புப் படையில் உள்ளவர்களுக்கு மனரீதியானதும் உடல் ரீதியானதுமாகிய பயிற்சிகளை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
மனரீதியான பயிற்சிகள் என்று அவர் எதைக் கருதுகிறாரோ தெரியவில்லை. ஆனால் சிங்கள பௌத்த மேலாதிக்க மனோநிலையானது சட்ட ரீதியாகப் பாதுகாக்கப்படும் என்ற ஒரு நிலை தொடரும் வரை மனோ ரீதியான எந்தவொரு பயிற்சியும் பெரிய விளைவுகளை ஏற்படுத்தப் போவதில்லை. அரசியல் யாப்பில் ஒற்றையாட்சி பாதுகாக்கப்படும் வரை பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் வரை பயங்கரவாதத் தடைச்சட்டம் புதிய வடிவத்தில் பேணப்படும் வரை போர்க் குற்றவாளிகளை பாதுகாக்கும் விதத்தில் விசாரணைப் பொறிமுறையானது அனைத்துலக மயநீக்கம் செய்யப்படும் வரை இச் சிறிய தீவின் அரசியலில் சிங்கள பௌத்த மேலாதிக்க மனோ நிலையின் ஆதிக்கம் தொடர்ந்தும் இருக்கும். மீள நிகழாமையின் மீது வேட்டுக்கள் தீர்க்கப்படும் வாய்ப்புக்களும் தொடர்ந்தும் இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *